
செபாக் தக்ரா விளையாட்டை ஒரு தேசிய மரபுடைமை விளையாட்டாகவும், தேசிய ஒற்றுமையின் சின்னமாகவும் உயர்த்துவதற்காக, அதில் பல்லின மக்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு (KBS) முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்புகிறார்.
செப்பாக் தக்ரா விளையாட்டு, குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள சமூகத்தின் வாழ்வில் நீண்ட காலமாக வேரூன்றியுள்ளதால், ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்றும், கிட்டத்தட்ட அனைத்துத் தலைமுறையினரும் இந்த விளையாட்டை அறிந்திருக்கிறார்கள் என்றும் அன்வார் கூறினார்.
இந்த விளையாட்டை வலுப்படுத்தும் முயற்சிகள் சங்கங்கள் அல்லது வீரர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே ஆர்வத்தைத் தூண்டும் வகையில் விரிவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“ஆரம்பத்தில், மலாய் இளைஞர்கள்தான் செபாக் தக்ரா மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தனர் என்பது உண்மை. இது சீன இளைஞர்கள் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டுவதைப் போன்றது,” என்று அவர் கூறினார்.
“ஆனால், மற்ற இனங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டு பங்கேற்பதை உறுதி செய்வதே இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பங்கு. அதேபோல, மலாய் பிள்ளைகளும் மற்ற விளையாட்டுகளில் ஈடுபட வாய்ப்பளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் இன்று இங்குள்ள மலேசிய செபாக் தக்ரா அகாடமி வளாகத்தின் திறப்பு விழாவில் உரையாற்றும்போது கூறினார்.

