பொருளாதார நெருக்கடி முற்றினால் அமைச்சர்களின் சம்பளக் குறைப்பு குறித்துப் பரிசீலிக்கப்படும்: பிரதமர் அன்வார் உறுதி

சைபர்ஜெயா, ஏப்ரல் 17: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் விளைவாக நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைந்தால், அமைச்சரவை அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு மலேசியாவிலும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், தற்போதைய சூழலில் அமைச்சர்களின் சம்பளம் அவர்களின் பொறுப்புகளுடன் ஒப்பிடும்போது ஓரளவுக்குக் குறைவாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“அமைச்சர்கள் தங்களின் பணிகளைச் சிறப்பாகச் செய்து வரும் வரை அவர்களின் தற்போதைய சம்பளம் நியாயமானதே என்று நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை, நான் சம்பளம் வாங்காமல் பணியாற்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால், அமைச்சர்கள் சிறப்பாகப் பணியாற்றும் வரை சம்பளம் என்பது அவர்களின் உரிமையாகும். இருப்பினும், பொருளாதாரச் சூழல் மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டால், சம்பளக் குறைப்பு குறித்து நிச்சயமாக ஆலோசிக்கப்படும்,” என்று அவர் விளக்கமளித்தார்.

சம்பளக் குறைப்பை விட, தற்போது அமைச்சர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதை உறுதி செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து தியாகங்களையும் செய்வதற்குத் தமது தலைமைத்துவத்திலான அரசாங்கம் பின்வாங்காது என்பதையே பிரதமரின் இந்த அறிவிப்பு புலப்படுத்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles