2,000 இந்தியர்களின் எதிர்காலத்தை மாற்றும் ‘வெற்றி மடாணி’! 10 மில்லியன் மதிப்பில் திட்டம் தொடக்கம் – டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர், ஏப்ரல் 25 —
இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிலான ‘வெற்றி மடாணி’ உயர் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்தை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று பிரிக்ஃபீல்ட்ஸில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (எச்.ஆர்.டி.கார்ப்) கீழ் செயல்படுத்தப்படும் இந்தச் சிறப்புத் திட்டத்தின் வழி, முதற்கட்டமாக 2,000 இந்தியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி, ரோபாட்டிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் போன்ற வருங்கால வேலைவாய்ப்பிற்குத் தேவையான உயர் மதிப்புமிக்க துறைகளில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

பிரிக்ஃபீல்ட்ஸ், விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் கந்தையா மண்டபத்தில் நடைபெற்ற இந்த எழுச்சிகரமான தொடக்க விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ ரமணன், ‘வெற்றி’ என்ற சொல்லின் பொருளுக்கேற்ப, இந்திய சமூகத்தினர் வாழ்வில் பொருளாதார வெற்றி பெற்று, தரமான வேலைவாய்ப்புகளையும் நிலையான வாழ்வாதாரத்தையும் அடைவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்று குறிப்பிட்டார்.

“வெற்றி மடாணி என்பது வெறும் சாதாரணப் பயிற்சித் திட்டம் மட்டுமல்ல; இது இந்திய சமூகத்தின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கான ஒரு முறையான மற்றும் தீர்க்கமான முயற்சியாகும். தற்போதைய தொழில்துறையின் அதீத தேவை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இலக்கோடு இது மிகச்சரியாக ஒத்துப் போகிறது,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இத்திட்டம் தற்போது பணியில் இருப்பவர்கள் தங்களின் தொழில் நிலையை உயர்த்திக் கொள்ளவும், வேலை தேடுபவர்கள் நவீன வேலைச் சந்தையில் புதிய வாய்ப்புகளைப் பெறவும் உதவும் வகையில் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இந்தியச் சமூகம் எக்காரணம் கொண்டும் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் மலேசிய அரசாங்கம் உறுதியாக இருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விழாவின் ஒரு பகுதியாக, மனிதவள அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு ஏஜென்சிகளின் கண்காட்சிக் கூடங்களுக்கு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக விளக்கமளித்தார்.

இத்திட்டத்தைச் சிறப்பாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்திய எச்.ஆர்.டி. கார்ப் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஷமிர் அஜீஸ் மற்றும் அவரது குழுவினருக்கு அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன், மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமது யூசோப், துணைத் தலைமைச் செயலாளர் டாக்டர் ஹாஜி முகமது ஷஹாரின் பின் உமர் மற்றும் புகழ்பெற்ற மருத்துவத் துறை பிரமுகர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் அம்பிகைபாகன் கந்தையா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பயிற்சிக்கான இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதால், தகுதியுள்ள இந்திய இளைஞர்களும் பணியாளர்களும் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் www.hrdcorp.gov.my என்ற இணையதளத்தின் வாயிலாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles