
கோலாலம்பூர், மே 3-
வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு நலன்களை விரிவுபடுத்தும் வகையில், சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
சிங்கப்பூரில் எல்லை தாண்டிச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களை முதற்கட்டமாக உள்ளடக்கிய இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தின விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் உடனடியாகச் சட்டமாக அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் என்பது சாதாரணமாகக் கருதப்பட வேண்டிய விஷயமல்ல என்று குறிப்பிட்ட அமைச்சர், மலேசியர்கள் எங்கு பணிபுரிந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்தத் திருத்தங்களின் நோக்கம் என்றார்.
குறிப்பாக, சிங்கப்பூருக்கு தினமும் வந்து செல்லும் சுமார் 4 லட்சம் மலேசியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் அத்தகைய தொழிலாளர்களிடையே 54 உயிரிழப்புகள் நேரிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், வெளிநாடுகளில் உழைக்கும் மலேசியர்களுக்கும் உள்நாட்டில் இருப்பதைப் போன்றே தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முந்தைய பரிந்துரைகளில் சில மாற்றங்களைச் செய்து, இந்தத் திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில் தற்போதைய திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

