பத்து கோடி வெள்ளி மித்ரா நிதி இந்திய சமுதாயத்திற்கு சென்றடைவதை கண்காணிப்பேன்! மனித வள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்தின் உருமாற்ற திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பத்து கோடி வெள்ளி முறையாக இந்திய சமுதாயத்திற்கு சென்றடைவதை கண்காணிப்பேன் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக சமுதாயத்திற்கு சென்றடையவில்லை என்ற புகார்கள் உள்ளன.

அதனால் இம்முறை மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட பத்து கோடி வெள்ளி பிரதமர் துறை அமைச்சின் கீழ் முறையாக இந்திய சமுதாயத்திற்கு சென்றடைவதை அமைச்சர் என்ற முறையில் தொடர்ந்து கண்காணிப்பேன் என்று அவர் சொன்னார்.

தெங்குன் கடனுதவி
திட்டத்திற்கு இம்முறை
மூன்று கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இரண்டு கோடி மட்டுமே தெங்குனுக்கு ஒதுக்கப்பட்ட வேளையில் இம்முறை கூடுதலாக ஒரு கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது.

மேலும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு முதல் முறையாக பட்ஜெட்டில் ஐந்து கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதிகள் எல்லாம் முறையாக சமுதாயத்திற்கு சேரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு இனத்தை மட்டும் சாராமல் அனைத்து இனங்களையும் பாதுகாக்கும் பட்ஜெட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார் என்றார் அவர்.

பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகள் கூடுதல் நிதியை பெறும் வாய்ப்பு இம்முறை ஏற்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட நிதி மட்டுமே கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட வேளையில் இம்முறை அனைத்து மொழி பள்ளிகளின் நலனை கருத்தில் கொண்டு மிகப் பெரிய மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக தமிழ்ப் பள்ளிகளுக்கு கூடுதல் மானியம் கிடைக்கும் என்று அவர் சொன்னார்.

தமிழ்க் கல்வி கலை கலாச்சார சங்கத்தின் ஏற்பாட்டில் ஓம்ஸ் அறவாரியம், தேசிய நிலநிதி கூட்டுறவு கழகம் , மலாயா பல்கலைக்கழகம் தமிழ் பேரவை, மலேசிய தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆதரவில் முதலாவது அனைத்துலக ஒளவையார் மாநாட்டை தொடக்கி வைப்பதற்கு முன் பத்திரிகையாளரிடம் பேசுகையில் மனித வள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles