பணியாளர் திறன் மேம்பாட்டிற்காக 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ‘Pace’ திட்டம் அறிமுகம்: மனிதவள அமைச்சர் ரமணன்

கோலாலம்பூர், மே 17-
நாட்டின் தொழிலாளர் சந்தையை மறுவடிவமைக்கவும், திறன் பயிற்சியை மேம்படுத்தவும், கிக் (gig) பொருளாதாரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘பேஸ்’ (Pace) எனப்படும் தேசியத் திறனாளர் திட்டத்தை மனிதவள அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்துவதோடு, தரமான வேலைவாய்ப்புகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தத் ‘திறன் மேம்பாடு மற்றும் தொழில் வாய்ப்பு முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் திட்டம் (PACE)’ உருவாக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET), இளைஞர் திறன் மேம்பாடு, டிஜிட்டல் பொருளாதார மாற்றம், உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் கிக் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது வெறும் பயிற்சித் திட்டம் மட்டுமல்ல, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், மிகவும் நெகிழ்வான மற்றும் அதிக திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஒரு பெரிய முதலீடு என்றும் அமைச்சர் ரமணன் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இலக்கு நோக்கிய முதலீடுகள், மக்களுக்கு தெளிவான மற்றும் அளவிடக்கூடிய நன்மைகளை வழங்குவதை உறுதி செய்யும் என்றும், இதன் மூலம் மலேசியா ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, நிலையான உயர் வருமானம் கொண்ட நாடாக உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சியில் யாரும் விடுபடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இந்த ‘Pace’ திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், வருமானத்தை வலுப்படுத்திக் கொள்ளவும் அதிக வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த மே 1ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், பொருளாதார பின்னடைவுத் தொகுப்பு 2026-இன் ஒரு பகுதியாக 710 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள இந்த ‘Pace’ திட்டத்தை அறிவித்திருந்தார்.

வேலை இழந்த தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆதரவு, இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான HRD Corp-இன் பயிற்சித் திட்டங்கள், இ-ஹெய்லிங் மற்றும் பி-ஹெய்லிங் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்கான 20 மில்லியன் ரிங்கிட் நிதியொதுக்கீடு மற்றும் சிறு நடுத்தர நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான 10 மில்லியன் ரிங்கிட் மானியம் உள்ளிட்ட நான்கு முக்கிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles