
சிறார்களை குறி வைத்து நடைபெற்று வரும் பாலியல் குற்றங்கள், குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்கள் தொடர்புடையதாக வெளிவரும் சம்பவங்கள், பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் முற்போக்கு கட்சித் (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் தெரிவித்துள்ளார்.
தற்போது அமலில் உள்ள தண்டனைகள் போதுமானதாக இல்லை என்றும், இத்தகைய குற்றங்களுக்கு மிகவும் கடுமையான மற்றும் தடுப்புச் சக்தி கொண்ட தண்டனைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சிறார்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து பாலியல் குற்றங்களும் மிகக் கடுமையான குற்றங்களாக வகைப்படுத்தப்பட வேண்டும்.
அத்தகைய குற்றங்களில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுவோருக்கு பரோல் இன்றிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை,” என்று அவர் கூறினார்.
மேலும், தொந்தரவு, கற்பழிப்பு முயற்சி, ஒழுக்கக்கேடான செயல்கள் மற்றும் பாலியல் தொல்லை போன்ற குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் பிரம்படி தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
“குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அரசாங்கம் எந்த சமரசமும் செய்யாது என்பதைக் காட்டும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் மீண்டும் சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மருத்துவ மற்றும் சட்ட பாதுகாப்புகளுடன் இரசாயன முறையிலான ஆண்மை குறைப்பு சிகிச்சை (Chemical Castration) வழங்கப்படுவதையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என அவர் கூறினார்.
பல நாடுகளில் இம்முறை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
செலாயாங் அனாதை இல்ல பாலியல் துஷ்பிரயோக வழக்கில் வழங்கப்பட்ட சமீபத்திய தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகவும், குழந்தைகள் அனுபவித்த மன உளைச்சல் மற்றும் அச்சத்துடன் ஒப்பிடும்போது தண்டனை போதுமானதாக இல்லை என்றும் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆபாச மற்றும் ஒழுக்கமற்ற உள்ளடக்கங்களுக்கான அணுகல் அதிகரித்திருப்பது பாலியல் குற்றங்கள் உயர்வதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
எனவே, குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைச் சட்டங்களை உடனடியாக வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிபிபி வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

