



கரகம், காவடி, ரத உற்சவம், மஞ்சள் நீராட்டு விழாவில் திரண்ட பக்தர்கள்!
சுங்கை பெசார், ஜூன் 1-
சிலாங்கூர் மாநிலம், சுங்கை பெசார் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் 94ஆம் ஆண்டு வருடாந்திரத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி அம்மனின் அருளைப் பெற்றனர்.
திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு, ஆலய வளாகமே பக்தி உணர்வால் நிறைந்திருந்தது. அன்றைய தினம் சுமார் பதினைந்து பெண்களும் ஆண்களும் இங்குள்ள ஆற்றங்கரை அருகே கரகம் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்திய நிலையில்
கரக ஆட்டங்களும் பக்திப் பாடல்களும் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை தொடங்கி பல்வேறு பகுதிகளிலிருந்து ஆலயத்திற்கு வந்த
பக்தர்களின் வருகை அதிகரித்தது. பக்தர்கள் பலரும் பால்குடங்கள், காவடிகள் ஏந்தி மன நிறைவுடன் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். ஆலயத்தைச் சுற்றி நடைபெற்ற காவடி ஊர்வலம் ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், திருவிழாவிற்கு மேலும் சிறப்பை சேர்த்தது.
மேலும் அன்றைய தினம் இரவு நடைபெற்ற ரத உற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்தது. வண்ணமயமான அலங்காரங்களுடன் சுங்கை பெசார் நகரையும், குடியிருப்புப் பகுதிகளிலும் வீதியுலா வந்த அம்மன் திருவுருவத்தை தரிசிக்க பொதுமக்கள் திரளாகக் குவிந்தனர். பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.
திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டு வைபவம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீரைத் தெளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன், ஆலய வளாகம் முழுவதும் திருவிழா கோலமாக காட்சியளித்தது.
வெள்ளிக்கிழமை இரவு கரகம் ஏந்திய பக்தர்களின் ஆன்மீகப் பயணம், ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஆற்றங்கரையில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் நிறைவடைந்தது. பக்தர்கள் இறுதியாக கரகங்களை ஆற்றில் இறக்கி விட்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிய நிகழ்வு பக்தர்களிடையே உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது. அதோடு அன்றிரவு அம்மன் தாலாட்டு வைபவமும் வெகு விமரிசையாக நடந்தேறியது.
மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த திருவிழா, சமய நல்லிணக்கம், பக்தி உணர்வு, சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இவ்வாண்டு திருவிழாவின் வெற்றிக்காக பாடுபட்ட தன்னார்வலர்களுக்கும், இளைஞர்களுக்கும், பக்தர்களுக்கும் இவ்வாலயத்தின் தலைவர் சி.சுப்ரமணியம் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

