13 ஆண்டுகால கல்விப் புரட்சி – பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச யு.ஏ.எஸ்.ஏ (UASA) நூல்கள் விநியோகம்!

​பிறை, ஜூன் 5 –

பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் நலனைக் கருத்தில்கொண்டு, அருள்மிகு முனீஸ்வரர் ஆலயம் மேற்கொண்டு வரும் கல்விச்சேவை இவ்வாண்டும் மிகச் சிறப்பாகத் தடம் பதித்துள்ளது.

6ஆம் ஆண்டு மாணவர்களுக்கான யு.ஏ.எஸ்.ஏ (UASA) தேர்வு மீள்பார்வை நூல்கள் வழங்கும் 13-ஆவது ஆண்டுத் திட்டம் பிறை, ஜாலான் பாருவில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
​”தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு” – டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு முழக்கம்
​இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 28 தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் நூல்களை எடுத்து வழங்கினார் பினாங்கு மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு.
​நிகழ்ச்சியில் உணர்வுப்பூர்வமாக உரையாற்றிய அவர்
​”தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் தாரக மந்திரத்தை நாம் அனைவரும் நெஞ்சில் ஏந்த வேண்டும். நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து,
முழு மூச்சாகப் பாடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
​மேலும், சமயப் பணிகளைத் தாண்டி கல்விக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் முன்னுரிமை வழங்கி வரும் பிறை அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தின் பொதுநலச் சேவையைப் பாராட்டிய அவர், நமது மாணவர்கள் மொழி, சமயம், கலாச்சாரம் என அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.

​2012 முதல் தொய்வில்லாத நற்பணி
​ஆலயத் தலைவர் மேஜர் சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டுக் குழுப் பொறுப்பாளர் டத்தோ கரு. இராஜமாணிக்கம் விவரிக்கையில், கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கும் திட்டம், எவ்விதத் தொய்வும் இன்றி 13 ஆண்டுகளாய்த் தொடர்ந்து வருவதை பெருமையுடன் சுட்டிக்காட்டினார். பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் கல்வித் திட்டங்களுக்கு உதவிட ஆலயம் எப்போதும் தயாராக இருப்பதாக ஆலயத் தலைவர் மேஜர் மு.சேகரன் தனது உரையில் உறுதியளித்தார்.

​கல்வி இலாகா நெகிழ்ச்சி
​இந்நிகழ்வில் பங்கேற்ற பினாங்கு மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் திரு. மா. கார்திக், தேர்வு மீள்பார்வை நூல்கள் வழங்குவதோடு மட்டுமின்றி, சமய வகுப்புகள் மற்றும் நிதியுதவிகளையும் வாரி வழங்கி வரும் ஆலய நிர்வாகத்திற்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
​’மாணவர்களின் கல்வி வளர்ச்சி’ என்ற உன்னத நோக்கோடு நடைபெற்ற இந்நிகழ்வில், பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆலயப் பொறுப்பாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles