மித்ராவின் ‘உயர்வு மடானி’ திட்டம்: இந்தியத் தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சி திட்டத்திற்கு ‘மைக்கி’ முழு ஆதரவு!

கோலாலம்பூர், ஜூன் 1-
மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவின் (மித்ரா) ‘உயர்வு மடானி’ எனப்படும் புதிய வணிகத் தொடக்க ஊக்குவிப்பு மானிய முன்னெடுப்பானது, இந்திய சமூகத்தின் தொழில்முனைவோர் சூழலை வலுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கை என கருதப்படுகிறது.

மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) இது குறித்துக் கூறுகையில், மித்ரா கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய முன்னெடுப்பானது, ஆரம்பக்கட்ட மூலதனம், தொழில்நுட்ப ஆதரவு, வணிக வலையமைப்புகளுக்கான அணுகல் மற்றும் தொழில்துறை வழிகாட்டிகளை வழங்குகிறது என்று தெரிவித்தது.

“இந்நாட்டு இந்தியர்களின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப, பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த இந்திய தொழில்முனைவோருக்குக் கட்டம் கட்டமாக அதிகப்பட்சம் 50,000 ரிங்கிட் மானிய உதவியை வழங்கும் ‘உயர்வு மடானி’ திட்டத்தின் அமலாக்கத்தை மைக்கி வரவேற்கிறது.

பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த தகுதியுடைய வணிக உரிமையாளர்களுக்கு இந்த ‘உயர்வு மடானி’ மானியம் சென்றடைவதையும், அவர்கள் இதன் மூலம் உண்மையான பலன்களைப் பெறுவதையும் உறுதி செய்ய மைக்கி உதவும்,” என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ என். கோபாலகிருஷ்ணன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மித்ரா கீழ் 6 புதிய முன்னெடுப்புகளை அமல்படுத்துவதன் மூலம் இந்திய சமூகத்தை மேம்படுத்த, மத்திய அரசு 65.6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தார்.

‘உயர்வு மடானி’ உள்ளிட்ட இந்த முன்னெடுப்புகள், நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதாரத் தரத்தை உயர்த்துவதற்காக கல்வி, தொழில்முனைவோர், சமூக மேம்பாடு, சுகாதாரம் மற்றும் சமூக உதவி ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன.

இதற்கிடையில், இந்தத் திட்டங்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக, அமைச்சகம், மித்ரா மற்றும் வணிகத் துறை ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்திய அமைச்சர் ரமணனின் முயற்சிகளையும் டத்தோஶ்ரீ என்.கோபாலகிருஷ்ணன் பாராட்டினார்.

“கல்வி, மனித மூலதன மேம்பாடு, சுகாதாரம், நலவாழ்வு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மித்ராவின் இம்முன்னெடுப்புகளை மைக்கி வரவேற்கிறது. இது நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய மக்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தொழில்முனைவோர் சமூகத்திற்கு இத்திட்டங்களின் தாக்கத்தை அதிகப்படுத்துவதற்காக, பல்வேறு வர்த்தக சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்ற மைக்கி உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles