சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் ஆலயத்தின் 94ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா வெகு விமரிசையாக நடந்தேறியது

சபாக் பெர்ணம், ஜூன் 7-

சபாக் பெர்ணம் தோட்டத்தில் (தோர்கிங்டன்) அமைந்துள்ள நூற்றாண்டுக்கும் மேற்பட்ட மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் ஆலயத்தின் 94ஆம் ஆண்டு திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி பரவசமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

பல தலைமுறைகளாக தோட்ட மக்களின் நம்பிக்கையின் சின்னமாக விளங்கி வரும் இந்த ஆலயம், ஆண்டுதோறும் முன்னாள் தோட்டவாசிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஒன்றிணைக்கும் முக்கிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இதனால் இந்த திருவிழா மத நிகழ்வைத் தாண்டி சமூக உறவுகளைப் புதுப்பிக்கும் சந்திப்பாகவும் விளங்குகிறது.

இவ்வாண்டு பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வருகை தந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள், உறவினர்கள், முன்னாள் தோட்டப் பாட்டாளிகள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்த காட்சிகள் விழாவிற்கு மேலும் சிறப்பூட்டின.

திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் உள்ளிட்ட சமய நிகழ்வுகள் நடைபெற்றதுடன், பக்தர்கள் பக்தி பரவசம் கமழ பால்குடம், தீச்சட்டி, கரகங்கள் ஏந்தி தங்களது நேர்த்திக்கடன்களை மனநிறைவுடன் செலுத்தி அம்மனின் திருவருட் கடாட்சத்தைப் பெற்றனர்.

ஆலய வளாகம் முழுவதும் பக்தி பாடல்களும் அம்மன் திருநாம ஓசைகளும் ஆன்மிக சூழலை ஏற்படுத்தியதோடு விழாவின் முக்கிய அம்சமான தீமிதி உற்சவம் மரபு வழக்கத்தின்படி நேற்றிரவு சிறப்பாக நடந்தேறியது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் உறுதியான பக்தியுடன் தீமிதியில் பங்கேற்றதைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் திரண்டிருந்தனர்.

இத்திருவிழா வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் தலைவர் கிருஷ்ணன் சிம்மாஞ்சலம், செயலாளர் கண்ணன் சிம்மாஞ்சலம், ஆலோசகர் இராமநாயுடு அப்பண்ணா ஆகியோர் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles