


பீடோர்,09ஜூன்: அடுத்த தலைமுறைகளின் நம்பிக்கையான எதிர்காலத்திற்கும் செழிமைமிகு வாழ்வியல் உத்தரவாதத்திற்கும் கல்வியே மூலதனம் என்று நினைவுறுத்திய பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் பிள்ளைகள் கல்வியில் பெரும் கவனம் செலுத்துவதைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
பள்ளியில் ஆசிரியர்களின் கற்பித்தலும் வழிகாட்டலும் இருந்தாலும், வீட்டில் பெற்றோர்களின் கண்காணிப்பும் ஊக்கப்படுத்துதலும் பிள்ளைகளின் கல்வி பயணத்தை நம்பிக்கையான இலக்கிற்கு இட்டுச் செல்லும் என்றும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய டத்தோ சிவநேசன் சிறந்த மற்றும் நம்பிக்கையான தலைமுறையை உருவாக்குவது என்பது நம் அனைவரின் கடமை என்றும் அவர் மேலும் நினைவுறுத்தினார்.
அதே வேளையில், கல்வியில் பின் தங்கிய மாணவர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் தொழில்த்துறை கல்வியின் மீது திருப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தொழில்த்துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் நாட்டில் மட்டுமின்றி உலளாவிய நிலையில் பெரும் கவனத்தை ஈர்த்து வருவதோடு வேலை சந்தையில் அதற்கான எதிர்காலமும் நம்பிக்கையான இலக்கில் உள்ள நிலையில் நம் மாணவர்கள் தொழில்துறை கல்வியில் தங்களின் சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொள்ள முன் வரவேண்டும் என்றார்.
பேரா மாநில அரசாங்கம் தொடர்ந்து தொழில்த்துறை கல்வி சார்ந்த முன்னெடுப்புகளையும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் நனிச் சிறப்பாக முன்னெடுத்து வரும் நிலையில் அரசு உருவாக்கியிருக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் தங்களின் சிறந்த எதிர்காலத்திற்கான மூலதனமாக அமைத்து கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
சுங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இரு மாணவர்கள் தங்களின் உயர்க்கல்வியை இம்மாதம் தொடங்விருக்கும் நிலையில் அவர்களுக்கு சுங்கை சட்டமன்ற உறுப்பினராக மடிக்கணினி வழங்கி கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களிடம் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதே வேளையில்,கல்வி சிறந்து விளங்கி குடும்பத்திற்கு நன்மதிப்பை உருவாக்குமாறும் அவ்விரு மாணவர்களையும் கேட்டு கொண்ட அவர் தங்களின் தம்பி,தங்கைகளுக்கும் முன்மாதிரியாக திகழுமாறும் கேட்டு கொண்டார். அதுமட்டுமின்றி,கல்வி சார்ந்த எந்த உதவியானாலும் தனது சேவை மையத்தை அணுகுமாறும் அவ்விரு மாணவர்களையும் ஊக்கப்படுத்தினார்.
உதவி பெற்ற மார்க்சு அன்புநெறி சசிகுமார் மற்றும் முகமாட் அடிஃப் அஷ்ராஃப் பின் ரிட்டூவான் ஆகிய இருவரோடு அவர்களின் பெற்றோர்களும் உடன் வந்திருந்ததோடு தங்களின் பிள்ளைகளுக்கு மடிக்கணினி வழங்கிய டத்தோ சிவநேசனுக்கும் தங்களின் நன்றியினைப் பகிர்ந்து கொண்டனர்.
அதே வேளையில்,இவ்வட்டாரத்திலுள்ள மாணவர்களின் கல்வி பயணத்தில் பெரும் அக்கறைக் கொண்டிருக்கும் டத்தோ சிவநேசன் மாணவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையான இலக்கை நோக்கி முன்னேற ஆக்கப்பூர்வமான சேவையையும் வழங்கி வருவதை எண்ணி பெற்றோராய் அகம் மகிழ்வதாகவும் அவரது சேவைக்கும் பங்களிப்பிற்கும் மாணவர் சமூகம் பெரும் கடமை பட்டிருப்பதாகவும் மார்க்சு அன்பு நெறியின் தாயார் திருமதி.தனலெட்சுமி தனது நன்றியில் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

