
ஷா ஆலாம், செப். 14: சிலாங்கூர் மாநிலத்தில் வேலை தேடுவோருக்கு பல்வேறு துறைகளில் 3,925 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
செப்பாங் மாவட்டத்தில் நடைபெற்ற JobCare Selangor Lindung Kerjaya வேலைவாய்ப்பு கண்காட்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 28 நிறுவனங்கள் பங்கேற்று, இந்த வேலை வாய்ப்புகளை வழங்கின.
மொத்த வேலை வாய்ப்புகளில் 71 விழுக்காடு, RM2,500க்கும் அதிகமான மாதச் சம்பளத்தை வழங்கின என சிலாங்கூர் மனிதவளத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
அதேவேளை, 3,450 வேலை வாய்ப்புகள் அல்லது 87.9 விழுக்காடு பணியிடங்கள் சிலாங்கூரிலேயே அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தங்குமிடம் மற்றும் உணவு, பான சேவைகள், மொத்த மற்றும் சில்லறை வணிகம், உற்பத்தித் துறை, சேவைத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் சிலாங்கூர் அரசு ஏற்பாடு செய்த மெகா சிலாங்கூர் வேலைவாய்ப்பு கண்காட்சியில் 100க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றதுடன், மாநில மக்களுக்காக 10,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
தொடர்ச்சியாக நடத்தப்படும் இத்தகைய வேலைவாய்ப்பு கண்காட்சிகள் மூலம், சிலாங்கூர் மக்களுக்கு தரமான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், தொழில் நிறுவனங்களின் பணியாளர் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

