
கோலாலம்பூர், செப் 9-
மலேசிய இந்தியச் சமூகத்தின் வரலாற்றில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலுவும், ஐபிஎப் கட்சியின் தோற்றுநர் டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதனும் தங்களுக்கென நிலையான இடத்தைப் பெற்ற மகத்தான ஆளுமைகள் என செபூத்தே எஸ்.எஸ். இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துன் சாமிவேலுவும் டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதனும் செல்வச் செழிப்பான குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லர். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராட வேண்டிய சூழலிலிருந்து தங்களது பயணத்தைத் தொடங்கி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள்.
கல்விக்காகப் போராடிய துன் சாமிவேலு
துன் சாமிவேலு பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய காலத்திலும் இரவுநேரப் பள்ளியில் கல்வி பயின்று, பின்னர் கட்டிடக் கலைஞராகத் தகுதி பெற்றார். அரசியலில் கால்பதித்த அவர், நாட்டில் நீண்டகாலம் அமைச்சராகப் பணியாற்றிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
தனது அரசியல் செல்வாக்கை இந்தியச் சமூகத்திற்கான கல்வி மற்றும் சமூக நிறுவனங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தினார். AIMST பல்கலைக்கழகம், MIED போன்ற நிறுவனங்களின் மூலம், அடுத்த தலைமுறையினர் கல்வி மற்றும் வாய்ப்புகளைப் பெறுவதற்கான புதிய பாதையை உருவாக்கினார். இது அவரது சமூகப் பணியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.
அடித்தட்டு மக்களின் சிம்மக் குரல்
டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன், சன் பெங் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துப் பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றிய நிலையிலிருந்து, உழைக்கும் வர்க்க மக்களின் போராளியாக உயர்ந்தார்.
தோட்டத் தொழிலாளர்கள், நகர்ப்புற உழைப்பாளர்கள் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்த அவர், அவர்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல் கொடுத்தார். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் சிம்மக் குரலாகவும் அவர் திகழ்ந்தார்.
அழியாத தடம்
வாழ்க்கை அவர்களை ஒரு சிறிய வட்டத்திற்குள் முடக்கி வைப்பதற்குப் பல காரணங்களைக் கொடுத்தது. ஆனால், அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து சமூகத்திற்குத் தலைமை ஏற்கும் பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
மலேசிய இந்தியச் சமூகத்திற்கு அதிகாரம், கண்ணியம் மற்றும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதில் இருவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.
இந்த இரு தலைவர்களையும் அறிந்ததோடு, சமூகப் பணிகளில் அவர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். அவர்களது ஆற்றல், கொள்கைப் பிடிப்பு, தன்னம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத மனஉறுதி ஆகியவை ஈடு இணையற்றவை.
அவர்களை நேசித்தாலும், அவர்களது செயல்பாடுகள் குறித்து விவாதித்தாலும், அவர்களை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. ஏனெனில், இருவரும் தங்களது காலகட்டத்தில் தனித்துவமான தடத்தைப் பதித்த தலைவர்கள்.
“நீங்கள் எங்கிருந்து தொடங்குகிறீர்கள் என்பது ஒரு சிறிய குறிப்பே; மற்றவர்களுக்காக நீங்கள் என்ன உருவாக்கிச் செல்கிறீர்கள் என்பதுதான் உங்கள் உண்மையான மரபு.”
வாழ்க்கையின் சவால்களை வென்று, தங்களது உழைப்பாலும் போராட்டத்தாலும் சமூகத்தில் அழியாத தடம் பதித்த இந்த இரு சகாப்தத் தலைவர்களுக்கும் எனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இவ்வாறு செபூத்தே எஸ்.எஸ். இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

