இந்திய வியாபாரிகளை ஒன்றிணைக்கும் BNP இந்திய வியாபாரிகள் அமைப்பு வெற்றிகரமாக இயங்குகிறது! தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை திட்டம் அறிமுகம்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர்,அக்.8-
இந்திய வியாபாரிகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கிடையே வர்த்தக வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் செயல்பட்டு வரும் பிஎன்பி (Business Network Partners Resources) வியாபார தளம், தற்போது 3,800 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அதன் தோற்றுநர் கலைவாணன் தெரிவித்தார்.

இந்த அமைப்பு இந்திய சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்காக உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட கலைவாணன், வியாபாரிகள் தங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதுடன், புதிய வியாபார வாய்ப்புகள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாகவும் இது செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய வியாபாரிகள் ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், அவர்களின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வி கரம் திட்டம்

வியாபார நடவடிக்கைகளுக்கு அப்பால், சமூகப் பொறுப்புணர்வுடன் பல்வேறு உதவித் திட்டங்களையும் பிஎன்பி முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக, ‘கல்வி கரம்’ என்ற திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளில் கல்வி பயிலும் பி40 பிரிவு மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் அடிப்படை கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளிப்பதற்கும் இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக கலைவாணன் குறிப்பிட்டார்.

அக்டோபர் 24ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி

பிஎன்பி சார்பில் எதிர்வரும் அக்டோபர் 24ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக காலை நேரத்தில் பூப்பந்து போட்டி நடைபெறவுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி நான்கு பிரிவுகளில் நடைபெறவுள்ளது.

இதில் சுமார் 150 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மற்றும் இரவு நிகழ்ச்சிகளின் போது விருந்து நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து ‘கல்வி கரம்’ திட்டத்தின் கீழ் ஐந்து தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்படவுள்ளன.

மாணவர்களின் அடிப்படை பள்ளித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு பொருட்கள் இந்த நிகழ்வில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 வியாபாரிகள் ஒன்றுகூடல்

இந்த நிகழ்வில் சுமார் 120 இந்திய வியாபாரிகள் ஒன்றுகூடவுள்ளனர். இதன் மூலம் வியாபாரிகளுக்கு இடையிலான தொடர்புகள் மேலும் வலுப்பெறுவதுடன், புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சமூகத்தைச் சேர்ந்த மேலும் அதிகமான வியாபாரிகள் பிஎன்பி அமைப்பில் இணைந்து, அதன் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என கலைவாணன் அழைப்பு விடுத்தார்.

வியாபார வளர்ச்சியுடன் சமூக நலனையும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் பிஎன்பி தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles