
கோலாலம்பூர், ஏப்.30-
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தொழிலாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அரசாங்கம் பல முனைகளில் தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கப் பாடுபட்டு வருகிறது.
தொழிலாளர்களின் நலன் காக்க நிதியுதவி வழங்கி வருகிறது. புதிய மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இவையனைத்தும் தொழிலாளர்கள் நலன் காக்கவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
மஇகாவும் தனது பங்குக்கு களத்தில் இறங்கி இந்திய சமூக தொழிலாளர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் உழைப்பே அவர்களின் மூலதனம். அதன் மூலமே அவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக உயர முடியும்.
எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், அவரையும் அவர் செய்யும் தொழிலையும் நாம் மதிக்க வேண்டும். கௌரவிக்க வேண்டும்.
எந்தத் தொழிலையும் நாம் தாழ்வாகவோ, தரக் குறைவாகவோப் பார்க்கக் கூடாது. இன்றைக்கு உலகில் உள்ள செல்வச் செழிப்புகள் அனைத்தும் பலதரப்பட்ட தொழிலாளர்களின் கடுமையான உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

