மோட்டார்‌ சைக்கிளில்‌ 6 நாடுகளுக்குப்‌ பயணம்‌வெற்றிகரமாக நிறைவு செய்த டத்தோ ஆனந்த்‌ – சஞ்சய்‌

மோட்டார்‌ சைக்கிளின்‌ வழி 7,846 கிலோ மீட்டர்‌ என ஆறு நாடுகளுக்குப்‌ பயணம்‌ மேற்கொண்ட
டத்தோ ஆனந்த்‌ ராமகிருஷ்ணன்‌, சஞ்சய்‌ ரங்கசாமி ஆகிய இருவரும்‌ வெற்றிகரமாக நாடு
திரும்பியுள்ளனர்‌.

ஹார்லி டேவ்சன்‌ எனப்படும்‌ உயர்தர மோட்டார்‌ சைக்கிள்‌ உலகளவில்‌ பிரபலம்‌ என்றால்‌ அது
மிகையாகாது. அந்த மோட்டார்‌ சைக்கிளில்‌ இவ்விருவரும்‌ மலேசியாவில்‌ இருந்து தாய்லாந்து,
மியன்மார்‌, லாவோஸ்‌, கம்போடியா, வியட்நாம்‌ என ஆறு நாடுகளில்‌ பயணம்‌ மேற்கொண்டு மறுபடியும்‌
அதே சாலை வழியில்‌ திரும்பியுள்ளனர்‌.

இது குறித்து பேசிய டத்தோ ஆனந்த்‌ ராமகிருஷ்ணன்‌, உலகளவில்‌ புகழ்பெற்ற ஹார்லி டேவ்சன்‌
நிறுவனம்‌ இவ்வாண்டு தனது 120௦ஆம்‌ ஆண்டு நிறைவு விழாவைக்‌ கொண்டாடுகிறது. அதனை
முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு ரக மோட்டார்‌ சைக்கிளை ஆசிய அளவில்‌ வாங்கிய முதல்‌ நபர்‌
நான்‌ ஆவேன்‌.

இந்தச்‌ சிறப்பு ரர மோட்டார்‌ சைக்கிளை வாங்கியதும்‌ அதனைக்‌ கொண்டு ஏதாவது சாதனையைச்‌
செய்ய நான்‌ முற்பட்டேன்‌. அதன்‌ அடிப்படையில்‌ இந்த ஆறு நாடுகளுக்கான பயணத்தைத்‌
திட்டமிட்டேன்‌.

குறுகிய காலத்தில்‌ இந்தப்‌ பயணத்திற்கான திட்டங்கள்‌ வடிவமைக்கப்பட்டன. கடந்த மாதம்‌ 14ஆம்‌
தேதி இந்த மோட்டார்‌ சைக்கிளைப்‌ பதிவு செய்த நிலையில்‌ 15ஆம்‌ தேதி என்‌ பயணத்தைத்‌
தொடங்கினேன்‌.

எனக்கு ஆதரவாக நண்பர்‌ சஞ்சய்‌ இந்தப்‌ பயணத்தில்‌ உடன்‌ பயணித்தார்‌ என்றார்‌ அவர்‌. நான்‌
199௦ஆம்‌ ஆண்டுகளில்‌ இருந்தே ஹார்லி டேவ்சன்‌ ரக மோட்டாரைப்‌ பயன்படுத்தி உள்நாடு
மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும்‌ பயணம்‌ மேற்கொண்டு வருகின்றேன்‌.

ஆனால்‌ இந்தப்‌ பயணம்‌ எனக்குப்‌ பெரும்‌ சவாலாக அமைந்ததோடு புதிய அனுபவங்களைக்‌ கற்றுக்‌
கொடுத்தது. பர்மா – தாய்லாந்து எல்லைக்‌ காட்டுப்‌ பகுதியில்‌ முன்னதாக ஏழு முறை
பயணித்துள்ளேன்‌. அப்போதெல்லாம்‌ அந்த இடம்‌ மிகவும்‌ குளிராக இருக்கும்‌. ஆனால்‌ இம்முறை
கடுமையான வெப்பம்‌ காரணமாக அந்தக்‌ காட்டுப்‌ பகுதிகள்‌ தீப்பிடித்து எரிந்தன.

நடுவே சாலையில்‌ நான்‌ பயணிக்கும்‌ சமயத்தில்‌ இருபுறமும்‌ இருக்கின்ற மரங்கள்‌ தீப்பிடித்து
எரிவதைக்‌ காணும்போது பதற்றம்‌ அதிகரித்தது.

ஆனாலும்‌ நான்‌ இந்தப்‌ பயணத்தை எப்படியாவது வெற்றிகரமாக முடித்து விட வேண்டும்‌ என்ற
எண்ணமே எனக்குப்‌ பெரும்‌ உந்துசக்தியாக அமைந்தது எனவும்‌ ஆனந்த்‌ ராமகிருஷ்ணன்‌ விவரித்தார்‌.

அது மட்டுமல்லாது ஆறு நாடுகளின்‌ சூழல்களும்‌ அங்குள்ள மக்களுடன்‌ பழகுவதும்‌ புதிய
அனுபவங்களைக்‌ கற்றுத்‌ தந்தன. ஒவ்வொரு நாட்டிலும்‌ தனி கலாச்சாரங்கள்‌ உள்ளன. இந்தப்‌
பயணத்தை வெற்றிகரமாக முடிக்க உறுதுணையாக இருந்த தந்‌ைத, சக மோட்டார்‌ சைக்கிள்‌ ஓட்டிகள்‌,
குடும்பத்தினர்‌ அனைவருக்கும்‌ நான்‌ நன்றி தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இதனையடுத்து வரும்‌ செப்டம்பர்‌ மாதத்தில்‌ தென்‌ கொரியா – ஜப்பானுக்கு மோட்டார்‌ சைக்கிள்‌
பயணம்‌ மேற்கொள்ளத்‌ திட்டமிட்டுள்ளேன்‌. அதற்கான வேலைகளில்‌ முழு மூச்சாக ஈடுபடுவேன்‌
எனவும்‌ அவர்‌ கூறினார்‌.

தொடர்ந்து பேசிய சஞ்சய்‌, முன்னதாக நான்‌ குறைந்த தூரத்திலேயே மோட்டார்‌ சைக்கிள்‌ பயணம்‌
மேற்கொண்டேன்‌. முதன்முறையாக இந்த 6 நாடுகளின்‌ பயணம்‌ வாழ்வின்‌ மறக்க முடியாத
அனுபவத்தைத்‌ தந்துள்ளது.

பயண நேரத்தில்‌ பல சமயங்களில்‌ நான்‌ தடுமாற்றம்‌ அடைந்தேன்‌. அந்தச்‌ சமயத்தில்‌ டத்தோ
ஆனந்த்‌ எனக்குப்‌ பெரும்‌ ஆதரவாக இருந்தார்‌. சில சமயங்களில்‌ நானும்‌ அவருக்கு ஆதரவாக
இருந்தேன்‌. இந்தக்‌ கூட்டு முயற்சியே எனக்கு வெற்றியாக முடிந்தது என்றும்‌ சஞ்சய்‌ குறிப்பிட்டார்‌.

இந்நிலையில்‌ தலைநகரில்‌ உள்ள ஹார்லி டேவ்சன்‌ மோட்டார்‌ விற்பனை மையத்தை வந்தடைந்த
அவ்விருவரையும்‌ சக மோட்டார்‌ சைக்கிளோட்டிகள்‌ பலரும்‌ வரவேற்றனர்‌. குறிப்பாக தஞ்சோங்‌ மாலிம்‌
தொடங்கி ஒரு சில மோட்டார்‌ சைக்கிளோட்டிகள்‌ அவ்விருவருடன்‌ உடன்‌ பயணித்து உற்சாகமூட்டினர்‌.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles