வெற்றிக்கான ரகசியங்கள் அனைத்தும் இந்திய சமய கலாச்சாரத்தில் உள்ளன – டான் ஶ்ரீ தம்பிராஜா பெருமிதம்

‘கல்வியும் சமயமும்’ என்ற வெற்றி கோட்பாட்டை நிலைநிறுத்தி கடந்த 41 வருடங்களாக இந்திய சமுதாயத்தில் மாபெரும் புரட்சியை மேற்கொண்டு வருகிறது ஶ்ரீ முருகன் நிலையம். கல்விக்கும் சமயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதை ஶ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி விரத நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

மலாயா பல்கலைக்கழகத்தின் மலாய் ஆய்வியல் புலத்தில் நடைபெற்ற ஶ்ரீ முருகன் நிலையத்தின் ‘கல்வி விரதம் 2023’ நிகழ்வில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக அரங்கேறியது.

பத்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து சமயமும் பாரம்பரியமும் மனிதனை நிலையான வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் இட்டுச் செல்லக்கூடியது.

அந்த வெற்றியை அடைவதற்கான ஞான ஒளியை கொண்டுள்ள நமது பண்டைய காலத்து இந்து சமய, கலாச்சார, பாரம்பரிய இரகசியம் இந்த கல்வி விரத நிகழ்வில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டதாக ஶ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குனர் டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் தம்பிராஜா தெரிவித்தார்.

மாணவர்கள் அவர்களது இலக்கை அடைய முட்டுக்கட்டையாக இருக்கும் தடைகளையும், கவனச் சிதறல்களையும் களைத்து அவர்களது வெற்றிக்கான பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க ‘பிரணவ வெற்றி’ எனும் நம் சமய உண்மைச் சம்பவத்தை அரங்கேற்றியது ஶ்ரீ முருகன் நிலையம்.

மஹாபாரத மாவீரன் அர்ஜுனாவை மையப்படுத்திய, முக்கிய சரித்திர நிகழ்வின் மூலமாக இன்றைய மாணவர்களுக்கு முக்கிய தன்முனைப்பு கருத்துகள் உணர்த்தப்பட்டன.

இந்நிகழ்வில், மற்றொரு சிறப்பு அம்சமாக ஶ்ரீ முருகன் நிலைய முன்னாள் தொண்டூழியர் டத்தோ ஜனா சந்திரன் முனியன் கௌரவிக்கப்பட்டார்.

தற்பொழுது மலேசிய போக்குவரத்துதுறை அமைச்சின் தலைமை செயலாளராக தலைமை வகிக்கும் டத்தோ ஜனா 1989 ஆண்டு முதல் 1994 ஆண்டு வரை ஶ்ரீ முருகன் நிலையத்தின் தொண்டூழியராகவும், தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் சேவை செய்துள்ளார்.

அரசாங்கத்தின் முதன்மை உயர் அதிகாரியாக பதவி வகிக்கும் டத்தோ ஜனாவின் தந்தை திரு முனியன், ஈய குட்டை தொழிலாளியாகவும், தாயார் திருமதி கண்ணம்மா இரப்பர் மரம் சீவும் தொழிலாளியாகவும் வேலை செய்து அவர்களது 4 பிள்ளைகளையும் பட்டதாரிகளாக உருவாக்கி, அவர்கள் பள்ளி ஆசிரியர், விரிவுரையாளர், காவல் அதிகாரி, அரசாங்க உயர் அதிகாரியாக வாழ்வில் மாபெரும் வெற்றி அடைந்திருப்பது வருகையாளர்களை பிரமிக்க வைத்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles