

ஈப்போ, மே 11-
பேராக் மாநில கராத்தே சங்கத்தின் மற்றும் மலேசிய ஒக்கினாவா கோஜூ ரியோ கராத்தே கூட்டமைப்பு ஏற்பாட்டில் 19ஆவது அனைத்துலக கராத்தே போட்டி நாளை மே 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ஈப்போ இண்ட்ரா முலியா அரங்கில் நடைபெறுகிறது.
பேராக் மாநில கராத்தே சங்கத்தின் புரவலர் மற்றும் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இந்த அனைத்துலக கராத்தே போட்டியை நாளை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
மலேசிய, இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், உஸ்பெகிஸ்தான், மொரோக்கோ, சுவிட்சர்லாந்து, புரூணை, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 2,000 கராத்தே விளையாட்டாளர்கள் ஈப்போவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர் .
100 தங்கம், 100 வெள்ளி மற்றும் 200 வெண்கலப் பதக்கத்தை தட்டிச் செல்ல புகழ்பெற்ற கராத்தே விளையாட்டாளர்கள் ஈப்போவை நோக்கி படை எடுக்கிறார்கள் என்று பேராக் மாநில கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் அனந்தன் தெரிவித்தார்.
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ போட்டியை நிறைவு செய்து வைக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
டாக்டர் மாஸ்டர் ஸ்டாலின் அவர்கள் இம்முறை அனைத்துலக கராத்தே போட்டியின் தொழில்நுட்ப குழு துணை தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

