


பத்தாங் காலி, ஜூன் 18-
சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி வாய்ப்பு நழுவி விடக்கூடாது என்பதற்காக விளையாட்டு மன்றம் அமைச்சரவை கூட்டத்தில் துணிந்து குரல் கொடுத்ததாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பியிருக்கும் மனிதவள அமைச்சர் சிவகுமார் நேற்று பத்தாங் காலனியில் நடைபெற்ற கலாச்சார விழாவில் கலந்து சிறப்பித்தார்.
உலுசிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வன் மற்றும் புவனேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில் தொடர்ந்து உரையாற்றிய மனிதவள அமைச்சர் சிவகுமார்,9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று வர்ணித்தார்.
சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடிக்கு இடம் இல்லை முதலில் அறிவிக்கப்பட்டபோது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உடனடியாக மலேசிய சிலம்பக் கழகம், கபடி சங்கத் தலைவர்களை அழைத்து கொண்டு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.
பின்னர் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற விளையாட்டு மன்றம் அமைச்சரவை கூட்டத்தில் சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற வேண்டும் என்று துணிந்து குரல் எழுப்பினேன்.
எல்லா இனங்களும் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினேன்.
இப்போது இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ மூலம் சிலம்பம், கபடிக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இது போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அவர் சொன்னார்.
கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை, சிலாங்கூர் விளையாட்டு பேரவை உதவித் தலைவர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், டிஎன்ஏ சந்திரசேகர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

