

சிரம்பான், ஜூன் 19-
சொக்சோ
இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (Housewives’ Social Security Scheme (SKSSR) தங்களது மனைவிகளுக்காக கணவன்மார்கள் ஆண்டுக்கு 120 வெள்ளியை செலுத்த முன் வர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இல்லத்தரசிகளுக்காக இந்த திட்டம் மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தியது.
ஜூன் 15ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 858 இல்லத்தரசிகள் இந்த திட்டத்தில் பதிவு பெற்றுள்ளனர் என்றுஅமைச்சர் வி.சிவக்குமார் சொன்னார்.
டிசம்பர் 1 முதல் சமூக பாதுகாப்பு வலைத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட இல்லத்தரசிகள் மற்றும் குடும்பங்களுக்கு இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 617 வெள்ளி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
“குடும்பத்தை நிர்வகிக்கும் போது உள்நாட்டு பேரழிவுகள், இயலாமை அல்லது காயம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பிற்காக சொக்சோ சமூக நல பாதுகாப்பில் பதிவு செய்து கொள்ள இல்லத்தரசிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
“குடும்பத்திற்கான அவர்களின் பங்கு மற்றும் தியாகங்களைப் பாராட்டுவதற்காக தங்களது மனைவிகளுக்காக ஒரு வருடத்திற்கு 120 வெள்ளி பங்களிப்பு செய்ய கணவர்மார்களை ஊக்குவிக்கிறேன் என்று அவர் சொன்னார்.
அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நலனுக்காக இல்லத்தரசிகள் சொக்சோ பங்களிப்புகளை பெறுவதற்கு உதவ முன் வர வேண்டும் என்றும் சிவக்குமார் அழைப்பு விடுத்தார்.
இவ்வாண்டு இறுதிற்குள் பத்து லட்சம் இல்லத்தரசிகளை இந்த திட்டத்தில் சேர்க்க மனிதவள அமைச்சு இலக்கு வைத்துள்ளது என்றார்

