
மலேசிய சிலம்பக் கழகத்தின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் ஏ. விஸ்வலிங்கம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
வரும் ஜூலை 9 ஆம் தேதி கோலாலம்பூர் YMCA மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு மலேசிய சிலம்பக் கழகத்தின் 43 ஆவது பேராளர் மாநாடும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வும் நடைபெறுகிறது.
இம்முறை தேர்தல் ஆண்டு என்பதால் அனைத்து பதவிகளுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
மலேசிய சுக்மா போட்டியில் சிலம்பத்தை இணைக்க கடுமையாக போராடிய நடப்புத் தலைவர் ஏ. விஸ்வலிங்கம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
கெடாவைச் சேர்ந்த துணை தலைவர் டாக்டர் சுரேஸ் இம்முறை விஷ்வலிங்கத்தை எதிர்த்து போட்டியிடுகிறார்.
துணை தலைவர் பதவிக்கு பகாங்கை சேர்ந்த தர்மசீலன் மற்றும் பேராவைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஐந்து உதவித் தலைவர்கள் பதவிக்கு கோலாலம்பூர் சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர். டி. உதயகுமார், ஜோகூர் கே.சிவம், மலாக்கா கிருஷ்ண குட்டி, சபா சுந்தரராஜூ, லாபுவான் கேப்டன் தேவேந்திரன், சரவாக் பழனி, புத்ரா ஜெயா கமலநாதன் மற்றும் சிலாங்கூர் சரவணன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மொத்தம் 9 பேர் கொண்ட மத்திய செயலவைக்கு 13 பேர் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் அதிகாரி டி கண்ணன் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தில் இருந்து 5 பேராளர் என மொத்தம் 80 பேர் மாநாட்டில் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வார்கள் என்று அவர் சொன்னார்.
இதனிடையே மலேசிய சிலம்பக் கழகத்தின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் ஏ விஸ்வலிங்கம் தலைவர் பதவிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

