
கோலாலம்பூர் ஜூலை 2-
நாட்டில் உள்ள இந்திய நகை
பொற்கொல்லர் தொழில்துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று அறிவித்தார்.
இருப்பினும் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
ஜெயபக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்ற ஜெயபக்தி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே உணவகம் உட்பட ஐந்து தொழில் துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்கள் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளான முடிதிருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகியவற்றுக்கு அந்நிய தொழிலாளர்கள் கிடைக்க பல முயற்சிகளை மனிதவள் அமைச்சர் சிவகுமார் மேற்கொண்டார்.
ஜூன் 27 ஆம் தேதி உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்பில் நகை பொற்கொல்லர் தொழில் துறைக்கு அனுமதி பெறப்பட்டது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.
முடித்திருத்தும் நிலையங்கள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறைக்கு அனுமதி பெறுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
இதனிடையே மலேசிய இந்தியர் பொற்கொல்லர் நகை கடைகளுக்கு வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தர போராடி மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மலேசிய இந்தியர் நகை பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.
அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம் என்றார் அவர்.

