



கோலாலம்பூர், ஜூலை 23-
மலாயாப் பல்கலைக் கழக வேந்தர் மண்டபத்தில் நடைபெற்று வரும் 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 501 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது இதனை ஒரு வெற்றி மாநாடாகப் பறைசாற்றியுள்ளது என்று மனித வள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ. சிவகுமார் தெரிவித்தார்.
இதற்கு முன்பு நடந்த மாநாடுகளைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் நடைபெறும் மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கும் ஒரு மாநாடு என்றே கூற வேண்டும்.
இந்த மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இதற்காக செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். பா. தியாகராஜனைத் தலைவராகக் கொண்ட ஓம்ஸ் அறவாரியம், டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் த.மாரிமுத்துவைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த ஏற்பாட்டு குழுவினரை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
“இவர்களின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் பேராளர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்ளும் அளவுக்கு சீரிய முறையில் நிகழ்ச்சியை வழிநடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கு இவ்வேளையில் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் “ என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமினால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை வளர்ச்சிக்கு 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
இடைநிலை பள்ளிகளில் 15 மாணவர்கள் இருந்தால் மட்டுமே தமிழ் மொழி பாடத்தைப் போதிப்பது என்ற நிபந்தனையைத் தளர்த்துவது உட்பட பல நல்ல தகவல்களைப் பிரதமர் இம்மாநாட்டில் கூறியிருப்பது நாட்டில் தமிழ் மொழி செழித்தோங்குவற்கு பிரதமர் உறுதுணையாக இருப்பார் என்பதற்கு நல்லதொரு சான்றாக அமைந்துள்ளது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.