

கோலாலம்பூர், ஆக 11-
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு பத்து லட்சம் வெள்ளி கிடைப்பதற்கு துணையாக இருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மனிதவள அமைச்சர் வ. சிவகுமாருக்கு தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு மானியம் வழங்கும்படி அரசாங்கத்திற்கு விண்ணப்பம் செய்தேன்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிரதமர் துறை அமைச்சு பத்து லட்சம் வெள்ளி மானியத்தை அங்கீகரித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.
உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகப் பெருமான் திருத்தலத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மனிதவள அமைச்சர் சிவகுமார் பத்து லட்சம் வெள்ளி மானியத்திற்கான கடிதத்தை தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜாவிடம் நேரில் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

