
மலேசியாவில் வாக்களிக்கும் வயது கட்டுப்பாட்டை 21 வயதுக்கே மீண்டும் மாற்ற வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி தேசிய தலைவர் டத்தோ ஆர்.எஸ் தனேந்திரன் கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் முதல் வாக்காளர்களிம் வயது கட்டுப்பாடு 18 முதல் என அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் 18 வயதுடைய இளைஞர் பள்ளி பருவத்திலிருந்து விடைப்பெற்ற பிறகு உடனடியாக அரசியலை பற்றி தெரிந்திருக்க முடியாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றியும் அறிந்திருக்க முடியாது.
அவர்களின் நிலையை சாதகமாக பயன்படுத்தி வாக்குகளை வாங்க நினைக்கும் தரப்பும் உண்டு. இது ஊழலாக மாறலாம். ஆகையால் வாக்காளர்களின் வயது கட்டுப்பாட்டு 18 இல் இருந்து மீண்டும் 21க்கு கொண்டு வரப்பட வேண்டுமென மக்கள் சக்தி கட்சி தீர்மாணத்தை கொண்டு வந்துள்ளது.
இன்று காலை தலைநகரில் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மக்கள் சக்தி கட்சியின் 15ஆவது பேராளர் மாநாட்டில் ஒரு தீர்மாணமாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், மாநாட்டிற்கு தொடக்கி வைக்க வந்த துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் அமிடி முன்னிலையில் முன்வைத்தார்.
தேசிய முன்னணிக்கு மக்கள் மத்தியில் மீண்டும் ஆதரவு அமோகமாக கிடைக்க அதன் செயல்பாட்டு திட்டங்களை அது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.
இந்தியர்களின் நலன் கருதி இன்று மக்கள் சக்தி கட்சி மஇகாவுடன் இணைந்து செயல்படுகிறது. இது நடப்பதற்கு முழு காரணம் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தான். இந்திய கட்சிகளிடையை ஒற்றுமையை உண்டாகிய பெருமை அவரையே சேரும் என தனேந்திரன் தெரிவித்தார்.
அரசியல் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல சரித்திரபூர்வ நிகழ்ச்சிகள் நிகழ்கிறது. உதாரணத்திற்கு ஜசெக மாநாட்டில் அம்னோவினர் இன்று கலந்து கொண்டது. மக்கள் நலனுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காவும் இந்த மாற்றங்கள் தேவைதான் என அவர் சொன்னார்.
இதற்கிடையில் கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மக்கள் சக்திக்கு தேசிய முன்னணி முதல் முறையாக வாய்ப்பு வழங்கியது. அது மக்கள் சக்திக்கு கிடைத்த பெருமையாகும். ஆகவே இம்முறை செனட்டர் பதவிகளும் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள மக்கள் சக்தி தயார் நிலையில் இருக்க இது ஊக்குவிப்பாக இருக்கும் என டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த மாநாட்டில் இந்தியாவிற்கு மோட்டார் பயணத்தை மேற்கொண்டு பல சாதனைகளை புரிந்துள்ள டத்தோஸ்ரீ நடராஜா பெரியசாமிக்கு துணைப் பிரதமரால் சிறப்பு செய்யப்பட்டது.

