

புத்ரா ஜெயா, செப்.15-
வரும் 2024 ஆம் ஆண்டில் சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய மனிதவள அமைச்சர் வ. சிவகுமாருக்கு மலேசிய சிலம்பக் கழகம் இன்று நன்றியை புலப்படுத்திக் கொண்டது.
கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் பத்து ஆண்டுகளாக சுக்மாவில் சிலம்பம் இடம் பெறவில்லை. மேலும் கபடி போட்டியும் சுக்மாவில் இடம் பெறாமல் போனது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றதும் சிவகுமார் உடனடியாக களத்தில் இறங்கி இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ உட்பட அனைத்து தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.
இவர் மேற்கொண்ட முயற்சிக்கு பலனாக அடுத்த ஆண்டு சரவாக்கில் நடைபெறும் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ் தெரிவித்தார்.
இன்று மரியாதை நிமித்தமாக மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ், துணை தலைவர் கமலநாதன் தலைமையில் மலேசிய சிலம்பக் கழகத்தின் பொறுப்பாளர்கள் மனிதவள அமைச்சர் சிவகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சிலம்பக் கழகத்தின் சார்பில் அமைச்சர் சிவகுமாருக்கு அதன் தலைவர் டாக்டர் சுரேஸ் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.