

புத்ரா ஜெயா செப் 15-
பாங்கி வட்டாரத்தில் இந்தியர்களுக்காக புதிய மின் சுடலை கட்டுவதற்கு மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று பாங்கி இந்து மயான பராமரிப்பு சங்கம் இன்று கோரிக்கையை முன் வைத்தது.
பல ஆண்டுகால போராட்டங்களுக்கு மத்தியில் பாங்கி – செமினி செல்லும் சாலையில் பாங்கி வட்டாரத்தில் வாழ்ந்த இந்தியர்களுக்காக கடந்த 2012 ஆம் ஆண்டில் 4 ஏக்கர் நிலம் கெஜட் செய்யப்பட்டது.
பாங்கி இந்து மயான நிர்வாக சங்கம் முறையாக பதிவு செய்யப்பட்டு எனது தலைமையில் தற்போது பாங்கி இந்து மயானம் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று அதன் தலைவர் மகேந்திரன் முனியாண்டி தெரிவித்தார்.
பாங்கி தோட்டம், புக்கிட் துங்கு தோட்டம், புரூம் தோட்டம், டுடடின் தோட்டம் உட்பட பல தோட்டங்களைச் சேர்ந்த தோட்டப் பாட்டாளிகள் மரணம் அடைந்தால் அவர்களின் நல்லுடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டன.
நான்கு ஏக்கர் நிலத்தை சுற்றி தார் சாலை அமைக்க உலுலங்காட் மாவட்ட நில இலாகா அனுமதியை வழங்கியுள்ளது.
கார்கள் நிறுத்துவதற்கு இடமும் தகன மண்டபம் கட்டுவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஒருவரின் நல்லுடல் அடக்கம் அல்லது தகனம் செய்யப்பட்ட பிறகு அனைவரும் அமர்ந்து பேசுவதற்கு புதிய மண்டபம் தேவைப்படுகிறது.
இந்த மண்டபத்தை கட்டுவதற்கும் பாங்கி இந்து மயானத்தை பராமரிப்பதற்கும் மனித வள அமைச்சர் சிவகுமார் உதவி புரிய வேண்டும் என்று தலைவர் மகேந்திரன் முனியாண்டி கோரிக்கையை முன் வைத்தார்.
மேலும் இந்த மயானத்தில் புதிய மின் சுடலையும் கட்டப்பட வேண்டும். இந்த திட்டம் நிறைவேற அமைச்சர் சிவகுமார் உதவி செய்யும்படி ஸஎன்று மகேந்திரன் கேட்டுக் கொண்டார்.
இவர் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் சிவகுமார் பாங்கி இந்து மயானத்தை பராமரிக்க உதவி புரிவதாக வாக்குறுதி அளித்தார்.
மேலும் இங்கு புதிய மின் சுடலை கட்டுவது தொடர்பாக காஜாங் மாவட்ட நகராண்மைக் கழகம் மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று அமைச்சர் சிவகுமார் விளக்கம் அளித்தார்.
மனிதவள அமைச்சருடன் இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பு கூட்டத்தில் பாங்கி இந்து மயான பராமரிப்பு சங்கத்தின் துணைத் தலைவர் தமிழ்ச் செல்வன், செயலாளர் முனியாண்டி முருகன், ஆட்சிக் குழு உறுப்பினர் மாதவன் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.