

கோலாலம்பூர் செப் 19-
நாட்டில் உள்ள இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் மூடப்படாமல் இருக்க அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் மாரான் மற்றும் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் பதில் அளித்தார்.
முடிதிருத்தும் கடைகள் உட்பட பல துறைகளில் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமரத்துவதை விட தீவேட் தொழில் திறன் மூலம் பயிற்சிகளை வழங்கலாம் என்று அவர்கள் கேள்வியை முன் வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவகுமார், இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் இல்லை என்றால் அவர்களின் வியாபாரம் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது.
மேலும் இந்த துறைகளில் வேலை செய்ய உள்ளுர் தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
அதனால் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு உதவி செய்ய அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் 7,500 அந்நிய தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இதனிடையே,
14 ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் அந்நிய தொழிலாளர் இல்லாததால் பெரும் பாதிப்பை எதிர் நோக்கி வந்தனர்.
இப்போது இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு புதிய விடிவுகாலம் பிறந்துள்ளது என்று அமைச்சர் சிவகுமார் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

