
ஈப்போ,நவ04:
ஷாகிர் நாய்க் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் பேராசிரியர் இராமசாமியை ஷாகிர் நாய்க்கிற்கு வெ.1,520,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருக்கும் நிலையில் அத்தொகையை வழங்குவதற்கு இந்தியச் சமுதாயத்தின் நன்கொடையை கோரியிருக்கும் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி முதலில் இவ்வழக்கு தொடர்பில் மேல்முறையீடு செய்யப் போகிறாரா?அல்லது இவ்வழக்கு தீர்ப்பை ஏற்றுக் கொண்டு இத்தோடு இதனை கைவிடப்போகிறாரா என சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் கேள்வி எழுப்பினார்.
மேலும்,இந்தியச் சமுதாயத்திடமிருந்து நிதி கோருவதற்கு முன்னதாக பேராசிரியர் இராமசாமி தன்னிடம் எவ்வளவு தொகை இருக்கு,இந்தியச் சமுதாயத்திடமிருந்து எவ்வளவு எதிர்பார்க்கிறார் போன்ற தகவல்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் பேரா மாநில ஆட்சிகுழு உறுப்பினருமான அவர் விளக்கம் கோரினார்.
மொத்த தொகையும் இந்தியச் சமுதாயத்திடமிருந்துதான் நன்கொடையாக பெறவேண்டுமானால்,இதுநாள் வரை இராமசாமி சேமித்த சொத்துதான் என்னவென்றும் வினவினார்.15 ஆண்டுகள் துணை முதல்வர்,15 வருடம் சட்டமன்ற உறுப்பினர்,ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.அவ்வகையில்,ஊக்கத்தொகை,ஓய்வு ஊதியம் உட்பட மேலும் சில வருமானமும் இராமசாமிக்கு கிடைத்திருக்கும் சூழலில் மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை குழப்பி இன்னமும் அவர்களிடம் நன்கொடை எனகோரி அவர்களை ஏமாற்றும் போக்கை யாராக இருந்தாலும் கைவிட வேண்டும் என்றார்.
இவ்வழக்கில் இந்தியச் சமுதாயத்திற்காக துணிந்துதான் இராமசாமி குரல் கொடுத்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை.ஆனால்,அவர் முதலில் தன்னிடம் எவ்வளவு இருக்கு,இன்னும் எவ்வளவு தேவைப்படுகிறது என்பதை வெளிப்படையாகவே அறிவிக்க வேண்டும்.அவ்வாறு அவர் அறிவிக்க முன்வந்தால் ஒரு இந்தியராய் இந்தியச் சமுதாயத்தின் பிரதிநிதியெனும் நிலையில் நன்கொடை வழங்க தாம் தயாராகவே இருப்பதாக சிவநேசன் மேலும் தெரிவித்தார்.
இவ்வழக்கை பொருத்தமட்டில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பின்னர் இராமசாமிக்கு இன்னும் இரு வாய்ப்பு உள்ளது.அவர் இவ்வழக்கை மேல்முறையீடு நீதிமன்றம் கொண்டுச் செல்ல்லாம்.அங்கு அவருக்கு சாதகமான தீர்ப்பு கிட்டாவிட்டால் அவர் இறுதி வாய்ப்பாக கூட்டரசு நீதிமன்றத்திற்கும் கொண்டுச் செல்ல்லாம்.இந்நிலையில்,இவ்வழக்கு தொடர்பில் இராமசாமி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து இன்னமும் தெளிவான விளக்கம் அளிக்காமல் மக்களை குழப்புகிறார் என்றும் ஒரு வழக்கறிஞர் என்னும் வகையில் எடுத்துரைத்தார்.

