

புத்ரா ஜெயா, நவ 14-
வெளிநாட்டு தொழிலாளர்களை தவறாக நடத்துவது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் தெரிவித்தார்.
குறிப்பாக வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு , முதலாளிகள் ஊதியம் வழங்காதது உள்ளிட்ட பல புகார்களை மனிதவள அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் சொன்னார்.
மலேசியாவை கட்டாய உழைப்பு நடைமுறைகளில் இருந்து விடுவிக்கும் அமைச்சின் விருப்பத்திற்கு இணங்க, தங்கள் தொழிலாளர்களை தவறாக நடத்தும் எந்தவொரு முதலாளி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க மனிதவளத் துறைக்கு (JTK) அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.
அவ்வப்போது வீட்டு வேலை செய்பவர்கள் தொடர்பாக வழக்குகள் போடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது உண்மைதான் என்றார் அவர்.
மனிதவள துறை தொழிலாளர்களை கண்காணிக்கவும் காப்பாற்றவும் களத்தில் இறங்கி உள்ளது.
முந்தைய வழக்குகளில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற மனித வள அமைச்சின் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்தோனேசிய தூதரகத்திற்கு வந்துள்ள புகார்களில் 90% வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான புகார்கள் என மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் சிவகுமாரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழியர்களை பாராபட்சமாக நடத்தும் முதலாளிக்கு எதிராக கட்டாய உழைப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மனிதவள அமைச்சு தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
வீட்டு பணிப்பெண்கள் நிர்வாகத்தில் அலட்சியமாக இருக்கும் முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

