
தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் தலா 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது.
2019,2020 பட்ஜெட்டில் நிதியமைச்சர் லிம் குவான் எங் தமிழ்ப் பள்ளிகளுக்கு 5 கோடி வெள்ளியை வழங்கினார் என்பது வரலாற்று உண்மை.
பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியை கவிழ்த்து விட்டு பின்புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் 2021 பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 கோடி வெள்ளியை அறிவித்தது.
2022 மற்றும் 2023 பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை.
பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இறுதியில் நான் எழுப்பிய எழுத்துப் பூர்வமான கேள்விக்கு அக்டோபர் 5 ஆம் தேதி கல்வி அமைச்சு பதில் அளித்துள்ளது
2021 இல் தமிழ் பள்ளிகளுக்கு 2 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது என்று அறிவித்துள்ளது .
பட்ஜெட்டில் 3 கோடி வெள்ளி என்று அறிவிக்கப்பட்டு இறுதியில் 2 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 2022 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு வெறும் 75 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளது என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் தெரிவித்தார்.
ஆக மொத்தம் 2021,2022 ஆம் ஆண்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கு 2 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று அவர் சொன்னார்.
பக்கத்தான் ஹராப்பான் ஆட்சி புரியும் மாநிலங்களில் பாலும் தேனும் ஆறாக ஒடுகிறதா என்று நக்கலாக கேள்வியை கேட்கும் ம இகா தலைவர்கள் தமிழ் பள்ளிகளுக்கான மானியத்தை பெற்றுக் கொடுப்பதில் கோட்டை விட்டது ஏன்.
இரண்டு ஆண்டுகளில் 10 கோடி வெள்ளி கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் 2 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மட்டுமே கிடைத்துள்ள வேளையில் 7 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை இந்திய சமுதாயமும் தமிழ்ப் பள்ளியும் இழந்திருக்கின்றன.
இந்திய சமுதாயத்தின் தாய்க் கட்சி என்ன மார்தட்டிக்கொள்ளும் ம இகா தலைவர்கள் தமிழ்ப்பள்ளி விவாகரத்தில் நம்பிக்கை துரோகம் இழைத்தது ஏன் என்று அவர் கேள்வியை எழுப்பியுள்ளார்.

