பன்னாட்டுப் பண்பாட்டுப் பறிமாற்ற மாநாட்டில் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்திற்கு ‘ANJAC Global Award’ வழங்கப்பட்டது.

ஈப்போ,நவ27:
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்திற்கு ‘அஞ்சாக் அனைத்துலக விருது’ வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி 2021ம் ஆண்டு முதல் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஏற்பாட்டில் வியாழன் தோறும் இரவு 9.30 கு இயங்கலையில் நடைபெற்று வரும் ‘வாசிப்பு முற்றம்’ என்ற நூல் கருத்துரை நிகழ்வில் 150 வாரங்களாகத் தொடர்ந்து ஈப்போ ஆசிரியர் கல்விக் கழக தமிழ்ப் பிரிவு விரிவுரையாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டும் மலேசியத் தமிழ் நூல்களைப் பற்றிய நூல் கருத்துரைகளும் வழங்கி வருவதால் இவ்விருது வழங்கப் பட்டது என்று அக்கல்விக் கழகத்தின் விரிவுரையாளர் தமிழ்த்திரு.வி.அருள்நாதன் தெரிவித்தார்.

அந்நிகழ்வில்,ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்திற்கும் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரிக்கும் இடையிலான பண்பாட்டு வாசிப்பு ஒத்துழைப்பு வியூக ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் தொடர்ந்து இரு கல்லூரிகளுக்கு இடையிலான ஒன்றிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். தொடர்நிலையில் பண்பாடு, கல்வி ஆகிய துறைகளில் பரிமாற்றத்திற்கு இது வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், ‘வாசிப்பு முற்றம்’ என்ற அனைத்துலக புத்தக கருத்துரை நூலும் வெளியீடு செய்யப்பட்டது.ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத் தமிழ்ப் பிரிவின் ஏற்பாட்டில் இப்புத்தகம் வெளியீடு கண்டது.ANJAC கல்லூரி ஏற்பாட்டிலான ‘வாசிப்பு முற்றம்’ இயங்கலை நூல் கருத்துரையில் படைக்கப்பெற்ற கருத்துரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36 நூல் கருத்துரைகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஈப்போ ஆசிரியர் கல்விக் கழக மாணவர்களின் 14 மலேசியத் தமிழ்ப் புத்தகக் கருத்துரைகளைத் தவிர இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, ஓமான் நாடுகளைச் சார்ந்தவர்களின் நூல் கருத்துரைகளும் இப்புத்தக்த்தில் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து, 110 மலேசியத் தமிழ்ப் புத்தகங்கள் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரிக்கு வழங்கப்பட்டன.ஈப்போ ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளர்கள் 60 தமிழ்ப் புத்தகங்களையும் அரசு சாரா இயக்கம் சூப்பர் மைண்ட டைனமிக் 50 புத்தகங்களையும் இக்கல்லூரி நூலகத்திற்கு வழங்கின. சூப்பர் மைண்ட் டைனமிக் சிலாங்கூர் பொது நூலகத்திற்குத் தமிழ்ப் புத்தகம் திரட்டும் திட்டத்தில் நூலாசிரியர்கள் மேலதிகமாகக் கொடுத்த புத்தகங்களில் இருந்து இந்த 50 புத்தகங்கள் இக்கல்லூரி நூலகத்திற்கு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles