
ஈப்போ, ஜன. 18:
ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் நிர்வாக பிரச்சினை இழுபறி நிலையில் இருந்து வந்தது. அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று பேராக் மாநில சங்க பதிவு இலாகா இரா.சீத்தா இராமன் அணியினர் முழு பொறுப்பை ஏற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்து விட்டதாக பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை மற்றும் இந்திய சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
புந்தோங் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் தைப்பூசத்தைச் சிறப்பாக நடத்திவரும் கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் ஆகியவற்றை வழிநடத்திவரும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவினர் புந்தோங் இந்து மின்சுடலையும் பராமரித்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
இம்மாதம் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுமா அல்லது ஆலயத்தின் பதிவு இரத்தாகுமா ? என்று பல கேள்விகள் எழுந்தன. பேரா மாநிலத்திலுள்ள இந்துக்களின் மத்தியில் இருந்து வந்த அச்சமும் வருத்தமும் இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும், மகிழ்ச்சியாக உள்ளதென்று அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் புதிய செயலவையினர் ஆலய நிர்வாகத்தை முறையாகவும் சட்டவிதிகளுக்கு உட்பட்டும் நடத்தும்படி சிவநேசன் கேட்டுக்கொண்டார்.
அதோடு, கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்திற்கு அருகிலுள்ள குனோங் செரே மலைச் சரிவில் உயிரிழந்தவர்கள் நினைவாக அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதனையும் அதன் சுற்றுப்புறத்தின் சுத்தத்தையும் ஆலய நிர்வாகம் கவனிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பில், ஆலயத் தலைவர் இரா. சீத்தாராமன், துணைத்தலைவர் க, சுரேன், செயலாளர் வெ.மு. தியாகராஜன், செயலவை உறுப்பினர்கள் ஆர். சிவபாலன், க. கோபிநாதன், கணக்காய்வாளர் ஆர். வி. சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர்.

