
கோலாலம்பூர்,ஜன21:
இந்திய சமுதாயம் அரசாங்கம் வாயிலாக கிடைக்கப் பெறும் வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்த சட்டம்த்துறை துணை அமைச்சர் மு.குலசேகரன் இந்திய இளைஞர்கள் தொழில்திறன் கல்வியிலும் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும்,இந்தியச் சமுதாயம் இந்நாட்டில் நல்ல சூழலிலும் சிறந்த நிலையிலும் அவர்களின் நிறைவான தேவைகளை அடையும் நிலையிலும் தான் வாழ்கிறோம்.
இதுதான் நிதர்சன உண்மையும் கூட என்றார்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் சுதந்திரம் பெற்ற பிறகும் நம் முன்னோர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தியாகம் செய்தார்கள் என்பது மறுப்பதற்கில்லை.
ஆனால்,மூன்று – நான்கு தலைமுறை கடந்தும் நாம் இன்னமும் அந்த பெருமையை மட்டுமே பேசிக்கிட்டு இருப்பது நம்மை சரியான இலக்கையும் வெற்றியையுன் நோக்கி கொண்டுச் செல்லாது என்பதை நாம் உணரவேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.
கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் பொது இயக்கங்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி,நாட்டின் அரசியல் நீரோட்டம்,பொருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் நாம் ஒருபோதும் பின் தங்கிவிடவில்லை.இந்நாட்டில் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியோடும் தங்களுடைய பண்பாடு,பாரம்பரியம்,கலை,மத நம்பிக்கை என பல்வேறு கூறுகளில் மலேசியர்களாய் ஒன்றுப்பட்டு வாழ்கிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நாட்டில் அவ்வப்போது பொறுப்பற்ற் சிலரால் மதவாதமும் இனவாதமும் தலைத்தூக்கினாலும் அது நாட்டின் அரசியலமைப்பிற்கும் இனநல்லிணக்கத்திற்கும் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தியதில்லை என்பதுதான் உண்மை.அத்தகைய பொறுப்பற்ற நபர்களை நாம் புறக்கணித்து நமது இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றார்.
ஒவ்வொரு முறையும் அரசாங்கம் நமக்கு எதையும் செய்யவில்லை என்பதை காட்டிலும் இருக்கும் வாய்ப்புகளை நாம் முறையாக பயன்படுத்தி உள்ளோமா என்பதை சிந்திக்க வேண்டும்.பிழைப்பிற்காக வரும் அந்நிய நாட்டுத் தொழிலாளிகூட இங்கு உழைத்து உயர்வான நிலையை எட்டும் போதும் நம்மால் முடியாது என்பது நமது தன்னம்பிக்கைகை நாம் தொலைத்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அரசாங்க வாய்ப்புகளை பயன்படுத்துவதில் நம்மிடையே இருக்கும் அலட்சியம் நம்மை தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்காமல் செய்து விடுகிறது.அரசு திட்டங்களில் இருப்பதை நம் சமுதாயம் எதையெல்லாம் கையகப்படுத்த முடியும்? எதையெல்லாம் நம் இனத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வித்திட முடியும் என்பதையெல்லாம் நாம் ஆராய்ந்து அதன் வழி இந்திய சமுதாயத்தை உயர்த்திட வழிசெய்ய வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.
இந்தியச் சமுதாயத்திற்கு உதவிடவும் வழிகாட்டவும் சட்டமன்றம்,நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தற்போது சமூக இயக்கங்களும் கைகோர்த்திருப்பது நல்லதொரு தொடக்கமாக கருதும் அதேவேளையில் வருங்காலச் சிந்தனை என்பது நம் சமுகத்திற்கு மிகவும் அவசியமானதாகவே அமைந்துள்ளது என்று தனதுரையின் போது குறிப்பிட்டார்.
மேலும்,நம் சமுதாயம் எதிர்கால அரசியலை சிந்தித்த வேளையில் நம் நாட்டில் அரசியல் மாற்றம் வந்தது போல் இன்றைய நவீனத்துவ உலகத்தை ஆட்கொண்டிருக்கும் கைதிறன் தொழிலை மலேசியாவில் மட்டுமின்றி உலகளாவிய நிலையில் நாம் நமது ஆளுமையையும் திறனையும் ஆட்கொள்ள வேண்டும்.
உலகநாடுகள் தொழில்புரட்சி 4.0 என்னும் இலக்கில் கைதிறன் தொழிலில் சிறந்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் நம் மாணவர்களும் இளைஞர்களும் அத்துறையில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்க விடுத்தார்.
கைதிறன் தொழிலில் நன்கு கற்றுதேர்ந்து அதில் நிபுணத்துவம் பெறுவோருக்கான வேலை வாய்ப்பு சந்தை விரிந்து கிடக்கிறது.உலகெங்கும் தற்போது கைதிறன் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே கிடக்கின்றன.
மலேசியாவில் TVET திட்டங்கள் வாயிலாக பல்வேறு பயிற்சிகளும் செயல்பாடுகளும் நாட்டில் இயங்கி வருகின்றன.அதில் நம் மாணவர்களும் இளைஞர்களும் கலந்து தங்களுக்கான எதிர்காலத்தை நம்பிக்கையான தடத்தில் அமைத்து கொள்ள வேண்டும்.இந்த TVET திட்டம்,அதன் செயல்பாடு குறித்து ஆலோசனை வழங்கவும் பயிற்சிகளில் இணையவும் பயிற்சிகள் குறித்த தெளிவுகளுக்கும் விளக்கம் கொடுக்க தாம் தயாராகவே இருப்பதாகவும் கூறினார்.
கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் கவலை உனக்கு இல்லை ஒப்புக் கொள் என்று நம் முன்னோர்கள் அன்றே பாடி சென்றனர்.நாம் தான் அதனை கவனத்தில் கொள்ள தவறிவிட்டோம்.ஆனால்,இன்றையச் சூழலுக்கும் நாளைய நம்பிக்கையான எதிர்காலத்திற்கும் கைத்தொழில் அதுசார்ந்த நிபுணத்துவ ஆளுமையும் இன்றியமையாததாய் அமைந்துள்ளது.
இன்றைய சந்திப்பில் நம் சமுதாயத்தின் இன்றையச் சூழப் வருங்கால நிலை என ஒரு கூறுகளில் சீர்த்தூக்கி பார்க்கும் நாம் அரசாங்கத்தில் இருக்கும் வாய்ப்புகளை நம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்குமான ஏணிபடிகளாய் உயர்த்துவதற்கு இலக்கு கொள்ள வேண்டும்.
மேலும்,தொழில் திறன் கல்வியில் ஆளுமை கொண்டு அதுசார்ந்த வாய்ப்புகளில் இந்தியர்கள் மேம்பாடும் வளர்ச்சியும் கொண்டு ஒவ்வொரு துறையிலும் தனித்துவமாய் ஜொலிக்க வேண்டும் என்பதையும் துணை அமைச்சர் எடுத்துரைத்தார்.
நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் கோபின் சிங்,துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி,நாடாளுமன்ற உறுப்பினர்களான கணபதிராவ்,பிரபாகரன்,யுகனேஸ்வரன்,சட்டமன்ற உறுப்பினர் வசந்தி உட்பட அரசு சாரா இயகத்தை சேர்ந்தவர்களும் பொது இயக்கத்தினரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

