
ஈப்போ, ஜன. 26:
ஈப்போ கல்லுமலை வளாகத்தில் குப்பைகளை அகற்றி துப்புரவு பணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவியாக பேராக் மாநில அரசாங்கம் 20 ஆயிரம் ரிங்கிட் வழங்கி உதவுவதாக பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
ஈப்போ மாநகர் மன்றம் ஆங்காங்கே குப்பை தொட்டிகளை தயார் செய்து வைத்துள்ளனர். குப்பைகளை அத்தொட்டிகளில் போட வேண்டும். அதை விடுத்து கண்ட இடங்களில் குப்பைகளை போடுவதால் ஆலய வளாகம் அசுத்தமாகவும், அசெளகரியத்தையும் உருவாக்கி வருவதாக அவர் வருத்தமாக சொன்னார்.
பல நிர்வாக பிரச்சினைக்கு சிறப்பான முறையில் தீர்வு கண்ட பின் ஈப்போ கல்லுமலை ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன், இந்த ஆலயம் முக்கிய தளத்தில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு பேராக்கிற்கு வருகை தாருங்கள் என்று உள்ளூர் மற்றும் அந்நிய நாட்டு சுற்றுப்பயணிகளை வரவேற்கும் ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்டது. ஆகையால், அதிகமான எண்ணிக்கையில் சுற்றுப்பயணிகள் இங்கு வருவார்கள் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
இந்த ஆலய வளாகத்திற்கு அருகாமையில் கடந்த 1973 ல் அக்டோபரில் பாறை விழுந்து கணிசமான எண்ணிக்கையில் பலர் அகால மரணமடைந்தனர். இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில் தற்போதைய ஆலய நிர்வாகத்தினர் சிறப்பு பூஜையை ஒவ்வொரு வருடமும் அக்டோபரில் செய்யும்படி அவர் கோரிக்கை வைத்தார்.
அதுமட்டுமின்றி, தற்போது மீண்டும் கோவிட் 19 தொற்று வந்து விட்டது. இந்த வியாதியின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்னதாக பல சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகிறது. அதன் அடிப்படையில் இவ்வாண்டு ஈப்போ தைப்பூசத்தில் கல்லுமலை ஆலய வளாகத்தில் கோவிட் 19 பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அத்துடன், ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையின் கார்நிறுத்தும் இடத்திலும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொதுமக் களிடையே பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஆலய வட்டாரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம்( சாமன்) வழங்கப்பட்டு வருவதாக புகார் கிடைத்துள்ளது. முதலில் பொதுமக்கள் சட்டவிரோதமாக கார் நிறுத்தும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். அத்துடன், போலீஸ் தரப்புடன் இவ்விவகாரம் குறித்து பேசப்படும். குறிப்பாக, அடுத்தாண்டு முதல் தைப்பூசத்தன்று எந்தவொரு வாகனத்திற்கும் சாமான் வெளியிட வேண்டாம் என்று பரிந்துரை செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
இச்சந்திப்பில், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் இரா.சீத்தா இராமன் தலைமையில் சிறப்பு பிரமுகர்களான பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன், சட்டத்துறை துணையமைச்சர் எம்.குலசேகரன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் எம். துள்சி, வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங்கின் சிறப்பு அதிகாரி ஆகியோருக்கு ஆலய நிர்வாகத்தினர் சிறப்பு செய்து கெளரவித்தனர்.

