
ஈப்போ, ஜன.27:
எதிர்வரும் 3.2.2024( சனிக்கிழமை) பிற்பகல் 3.00 மணியளவில், ஈப்போ ஜாலான் குட்வாரா கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில், பேராக் மாநில தமிழர் திருநாள் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஈப்போ தமிழர் திருநாள் 2024 கலை இலக்கிய பண்பாட்டு விழா நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தலைவர் வழக்கறிஞர் எம்.மதியழகன் கூறினார்.
இவ்விழாவில் தமிழர் மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவையின் பெருமைகள் விளக்கும் வகையில் இலக்கிய உரைகள், பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், வேட்டி அழகர் போட்டி, சேலை அழகு போட்டி, சான்றோர் தோற்றம் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வினை திறப்புரை செய்கிறார் சட்டத்துறை துணையமைச்சர் மு.குலசேகரன். அத்துடன், பினாங்கு மாநில மேனாள் காவல்துறை ஆணையர் டத்தோஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகம் இலக்கிய சொற்பொழிவு ஆற்றுவார் என்று எம்.மதியழகன் சொன்னார்.
இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசம் என்பதோடு, வருகையாளர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேராக் மாநில தமிழர் திருநாள் இயக்க தலைவர் மாயமுத்து கூறினார்.
இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க பொதுமக்களை அன்போடு அழைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

