
கோலாலம்பூர்,ஜன29: மலேசியாவின் கல்வி தரம் உலகளாவிய கல்வி தரத்தோடு சிறந்த மதிப்பீடை கொண்டிருக்க வேண்டும்.ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கு கல்வி பெரும் பங்காற்றும் சூழலில் மலேசியாவின் கல்வி முறையும் அதுசார்ந்த திட்டமிடல்களும் ஆக்கப்பூர்வமான தரநிலையில் இல்லாதது ஏமாற்றமானது என பிரதமர் துறையின் சட்டத்துறை துணை அமைச்சர் மு.குலசேகரன் தெரிவித்தார்.
மலேசியாவின் கல்வி முறையானது பாடநூல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.இது எந்த நிலையிலும் உலகளாவிய நிலையிலான கல்வி செயல்முறை மற்றும் கல்வி உயரிலைக் கொண்டிருக்கவில்லை.நாட்டின் கல்வி உருமாற்றங்கள் கூட இதுவரை நல்லதொரு பலனை நமக்கு அளித்ததில்லை என்பதை அன்மைய ஆய்வு ஒன்று நினைவுறுத்தியுள்ளது என்றார்.
மலேசியாவின் கல்வி முறையும் கல்வி தரமும் நமது அண்டை நாடான சிங்கப்பூரை காட்டிலும் பின் தங்கியிருப்பது ஏமாற்றமானது தான் என்பதை மறுப்பதற்கில்லை.
மலேசியாவில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் நாம் இன்னமும் உலக தரத்திலான கல்வி முறைக்கு நம்மை தயார்ப்படுத்தி கொள்ளவில்லை என்பது வருத்தமானது.
கல்வி உருமாற்றம் என்பது திட்டம் அளவில் இருப்பதை நாம் தவிர்க்க வேண்டும்.அவை முறையாக நன்கு ஆராயப்பட்டு செயல்படுத்துவதிலும் கல்வி அமைச்சும் அரசும் தீவிர முனைப்பு காட்ட வேண்டும்.நமது அண்டநாடான சிங்கப்பூர் கணிதம் அறிவியலிலும் வாசிப்பு செயல்முறையிலும் உலகளாவிய நிலையில் 2வது நிலையில் உள்ளது.ஆனால்,மலேசியா அவற்றில் முறையாக 48 மற்றும் 57வது தர வரிசை பட்டியலிடப்பட்டிருப்பது மலேசியாவின் ஒட்டுமொத்த கல்வி முறைமீதும் நம் கவனத்தை செலுத்துவதற்கான நினைவுறுத்துலாகவே இது அமைந்துள்ளது என குலசேகரன் மார்ச் 2023இன் ஆய்வை சுட்டிக்காண்பித்தார்.
வாசிப்பு திறனில் மலேசியர்களின் ஆர்வமும் செயல்திற்னும் மிக குறைவாக இருப்பது என்பது அதிர்ச்சியான ஒன்றுதான் என்பதையும் நினைவுறித்திய குலசேகரன் அந்த ஆய்வின் அடிப்படையில் நாட்டிலுள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்களில் வெறும் 13 விழுகாடு மானவர்கள் வாசிக்கும் செயல்திறனை கொண்டிருக்கவில்லை எனவும் 15 வயது மலேசியர்களில் 50 விழுகாடு பேர் வாசிப்பு திறனைத் தங்களின் நிலைக்குன் குறைவாக கொண்டிருப்பதாக செப்டம்பர் 3ஆம் தேதி 2023இன் ஆய்வு காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
மலேசியா உலகளாவிய நிலையில் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு சுயாட்சிகுழுவை அமைத்து நல்லதொரு ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.இனியும் நாம் பாடநூல்களில் நம்மை சூழ்ந்த விவகாரங்களை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் நமது எதிர்கால மாணவர் சமூகத்திற்கு தேவையானதை கண்டறிந்து கல்வியில் உலகளாவிய நிலையில் சவால் கொண்டு தனித்துவமாய் மிளிரும் நிலையிலான கல்வி திட்டத்தை வரையறுக்க வேண்டும் என்றா.
மலேசியர்கள் கல்வியில் சிறந்து விளங்க நமது அண்டைநாடுகளுக்கு இணையாக இருப்பதற்கு ஆரம்பக் கல்வியை சரியான இலக்கிற்கு நகர்த்தல் வேண்டும்.மேலும்,சரியான தத்துவார்த்த அடித்தளத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் இன்றியமையாத. ஒன்றாகும் என்றும் தெளிவான குறிப்பை அவர் விவரித்தார்.
மலேசியாவிற்கு பிற நாடுகளுக்குமான கல்வியல் முறையிலும் அதன் செயல்திட்ட வரையறையிலும் ஒரு பெரிய இடைவெளி உள்ளது.அந்த இடைவெளியை தூரநோக்கோடும் நாட்டின் வருங்கால சிறந்த கல்வியல் முறைக்கு வித்திடும் ஆக்கப்பூர்வமானதாகவும் நிலைக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்துதல் காலத்தால் செய்ய வேண்டிய அரும்பணியாகும்.
மேலும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மலேசியாவின் கல்வி தரம் 81 நாடுகளில் 51வது இடத்தில் இருப்பது வருத்தமானது என்றும் நாட்டின் கல்வி தரம் குறித்து அரசியல் பிரதிநிதிகள் முதற்கொண்டு நமது பிரதமர் கூட கருத்துரைத்துள்ளார்.அவசியமாக கவனிக்கப்பட வேண்டிய ஓர் முக்கிய சிக்கலாகவே இது அமைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
நாட்டின் கல்வி தரம் சார்ந்த சிக்கல் இன்று நேற்று தொடங்கியதில்லை.சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்கிறது.ஆனால்,கல்வி அமைச்சின் அலட்சியமும் தூரநோக்கு பார்வையும் இல்லாத காரணத்தினால் நாம் தொடர்ந்து இத்துறையில் பின் தங்கியே இருந்து வருகிறோம் என்றார் அவர்.இனியும் நாம் அலட்சியமும் அர்த்தமற்றும் இருந்தோமானால் நமது வருங்கால தலைமுறையும் நாட்டின் எதிர்காலமும் நிச்சயம் கேள்விக்குறியாகும் என்றும் குலசேகரன் எச்சரித்தார்.
இச்சிக்கல்களுக்கு நல்லதோர் தீர்வை காண கல்வி அமைச்சு ஆக்கப்பூர்வமாக களம் இறங்க வேண்டும்.கல்வியாலர்கள்,உலகளாவிய கல்வி சிந்தனையாளர்களோடு கலந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.வெள்ளை அறிக்கை தயார்செய்து அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் வேண்டும் என்றார்.
நாடாளுமன்ற விவாத்தில் நாட்டின் எதிர்காலக் கல்வியை நிர்ணயம் செய்யப்போகும் அந்த வெள்ளை அறிக்கை முதன்மையான விவாதமாக எடுத்து கொள்ளவும் வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.
கல்வி என்பது வேலைக்கானது அல்ல.அது அறிவார்ந்த மக்களை உருவாக்கும் மாபெரும் களம்.ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வித்திடும் மூலதனம்.உலகளாவிய நிலையில் மலேசியாவின் அடையாளமாக மிளிரப்போகும் அடித்தலம்.எனவே,இவ்விவகாரத்தில் கல்வி அமைச்சும் அரசங்கமும் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் கேட்டுக் கொண்டார்.

