
கோலாலம்பூர், ஜன.30:
2023-எஸ்பிஎம் தேர்வை இன்று முதல் எதிர்கொள்ளும் 3இலட்சத்து 95ஆயிரத்து 870 மாணவர்களுக்கும், குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு மஇகா சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்வி மேம்பாடுதான் எதிர்கால பற்றுக்கோடு என்பதாலும் மாணவர்களுக்கு உயர்க்கல்விப் பயணத்தின் திருப்புமுனையாக இந்தத் தேர்வு அமைவதாலும் அனைத்து இந்திய மாணவர்களும் இந்தத் தேர்வை சிறப்பாக எழுதி சாதனை மாணவர்களாகத் திகழ வேண்டும் என்று மஇகா மனதார விரும்புகிறது.
எம்ஐஇடி என்னும் கல்விக் கரம், டேஃப் தொழில் நுட்பக் கல்லூரி, பன்னாட்டுத் தரத்திலான எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மூலம் உங்கள் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்ட மஇகா என்றென்றும் தயாராக இருக்கிறது என்று விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய எஸ்பிஎம் தேர்வில் அமரும் அனைத்து இந்திய மாணவர்களும், சாதனைஇளைஞர்களாக தங்களை உருமாற்றிக் கொள்ளும் வகையில் இந்தத் தேர்வை எழுத வேண்டும்.
இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டில், மஇகா தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. ஆரம்பப் பள்ளி மாணவர்கள், இடைநிலைக் கல்வி மாணவர்கள், தொடர்ந்து உயர்க்கல்வி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்பதுடன் அல்லாமல், கல்வியில் பின் தங்கிய மாணவர்களையும் விட்டுவிடாமல் அவர்களுக்கு தொழில்கல்வி வாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்க்கைப் பாதைக்கு மஇகா தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.
இதை கடந்த கால சரித்திரம் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டி உள்ளார்.
யூபிஎஸ்ஆர் தேர்வில் 7-ஏ, 8-ஏக்கள் பெற்று சிறந்த அடைவு நிலையுடன் தேர்ச்சிபெறும் மாணவர்களை மேலும் உற்சாகப் படுத்தும் விதமாக அவர்களுக்கு சிறப்பு செய்வது, மஇகா முன்னாள் தேசிய தலைவர் துன் ச.சாமிவேலு காலத்தில் தொடங்கப்பட்டது. அப்படிப்பட்ட மாணவர்களை அழைத்து சான்றிதழும் பண அன்பளிப்பும் வழங்கப்பட்டன.
எல்லாவற்றுக்கும் மேலாக, உயர்க் கல்வி மாணவர்களுக்கும் உரிய வசதியையும் உதவியையும் மஇகா ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. தகுதி இருந்தும் பொது பல்கலைக்கழங்களில் இடம் கிடைக்காத மாணவர்களை தேசிய அளவில் ஒருங்கிணைத்து அவர்களுக்கு மஇகா கல்விக் குழுவின் மூலம் உரிய ஏற்பாட்டை மஇகா மேற்கொண்டு வருகிறது.
அந்த நிலையிலும் விடுபடும் மாணவர்களுக்கு, எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

