
கோலாலம்பூர் பிப் 16-
சிறை முதல் பிரதமர் வரை என்ற தலைப்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பற்றி பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் இரா. முத்தரசன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நேற்று சிலாங்கூர் கிளப்பில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா. தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு கணிசமான தொகையை கொடுத்து நூலை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நூல் ஆசிரியர் இரா. முத்தரசன், நமது எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழா பல இடங்களில் நடைப்பெற்றாலும் புதிதாக கட்டப்படும்
ம இகா தலைமையக மண்டபத்தை நமது எழுத்தாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றார்.
மேலும் தமிழ் படைப்புகள் இடம் பெறும் வகையில் ஒரு புதிய நூலகத்தையும்
ம இகா ஏற்படுத்தி தர வேண்டும் என்று மற்றொரு கோரிக்கையை முன் வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய டத்தோஸ்ரீ சரவணன், நமது எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாவுக்கு நேதாஜி மண்டபத்தை வழங்கி இருக்கிறோம்.
ஆகவே உங்கள் கோரிக்கையை நாங்கள் கண்டிப்பாக பரிசீலிப்போம் என்று அவர் சொன்னார்.
இந்த விழாவில் சட்டத் துறை துணை அமைச்சர் எம் குலசேகரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், தம்பூன் நாடாளுமன்ற தொகுதி இந்திய பிரிவு அதிகாரி சுரேஸ் குமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

