
கோலாலம்பூர், மார்ச் 5 –
பழைய கிள்ளான் சாலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கே.எல்.ரெப்பிட் பஸ் இங்குள்ள ஜாலான் சைட் புத்ராவில் திடீரென தீப்பற்றியது. காலை 8.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஏழு பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்.
இந்த தீவிபத்து தொடர்பில் இன்று காலை 8.06 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக ஹாங் துவா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கைப் பிரிவு மூத்த அதிகாரி முகமது சுஹைமி
முகமது ரசாலி கூறினார்.
ஹாங் துவா மற்றும் சீபூத்தே தீயணைப்பு நிலையங்களிலிருந்து ஆறு வண்டிகளில் 16 தீயணைப்பு வீரர்கள் இடத்திற்கு விரைந்தாக அவர் மேலும் சொன்னார்.
பஸ்ஸின் பின்புறம் தீ ஏற்பட்டது குறித்து மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பஸ் ஓட்டுநருக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாகப் பஸ்சை
சாலையோரம் நிறுத்திய ஒட்டுநர் அதன் இயந்திரத்தையும் நிறுத்தியுள்ளார் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த தீ விபத்தில் அந்த பஸ் 90 விழுக்காடு அழிந்ததாகக் கூறிய அவர், விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகச் சொன்னார்.

