
ஷா ஆலம், மார்ச் 5-
சிலாங்கூர் மாநிலத்தில் பி.40 வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் இலவச பேருந்து கட்டணம் வழங்கப்படுவதாக ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு இன்று தெரிவித்தார்.
இந்த 300 வெள்ளி இலவச பேருந்து கட்டணம் வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
கடந்த 2013 இல் வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம் வழங்கும் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகப்படுத்தியது.
2013 முதல் தொடர்ந்து இந்த இலவச பேருந்து கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2023 ஆம் ஆண்டில் 3,594 மாணவர்களுக்கு 11 லட்சத்து 78 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை கொண்டு அதற்கு ஏற்ப இலவச பேருந்து கட்டணம் வழங்கப்படும் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் ஆகியவை ஒன்றாக இணைத்து மாணவர்கள் பட்டியலை விரைந்து அனுப்பி உதவும்படி கேட்டுக் கொண்டார்.
மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி பிற்பகல் 12.00 மணிக்குள் முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

