

கோலாலம்பூர் மார்ச் 6-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த இந்து ஆலயங்கள் ஒன்றாக பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
சுமார் 130 ஆண்டுகளுக்கு மேலாக பூச்சோங் வட்டார மக்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கும் இந்த ஆலயம் இப்போது மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
இந்திய சமுதாயத்தின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு ஆலய நிர்வாகம் இப்போது ஒரு கோடி வெள்ளியில் பல்நோக்கு கூட்டுறவு மண்டபத்தை கட்டி வருகிறது.
70 லட்சம் வெள்ளி செலவில் இதன் கட்டுமானப் பணிகள் 70 விழுக்காடு பூர்த்தியாகிவிட்டன. இன்னும் எஞ்சியுள்ள 30 விழுக்காடு பணிகள் பூர்த்தியடைய 30 லட்சம் வெள்ளி தேவைப்படுவதாக பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவர் டத்தோ டாக்டர் அ.ப.சிவம் தெரிவித்தார்.
மூன்று மாடிகள் கொண்ட இந்த மண்டபத்தை திருமண உட்பட அனைத்து சுக காரியங்களுக்கும் பயன் படுத்தி கொள்ளலாம்.
இந்த மண்டபத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்திய சமுதாயத்திற்கும் இந்திய மாணவர்களின் கல்வி நிதிக்கும் பயன்படுத்தப்படும்.மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்களில் இது போன்ற ஒரு பிரமாண்டமான மண்டபம் இல்லை எனலாம்.
ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் அளவில் கட்டப்படும் இந்த மண்டப கட்டட நிதிக்கு நிதி திரட்டும் வகையில் வரும் மார்ச் 30 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு புத்ரா ஜெயா Marriott தங்கும் விடுதியில் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருந்து நிகழ்ச்சியின் மூலம் ஒரு கணிசமான தொகையை திரட்ட முடிவு செய்துள்ளோம். நல்லுள்ளம் படைத்த கொடை நெஞ்சர்கள், தொழில் அதிபர்கள் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
கட்டடக் குழு தலைவராக பாஸ்கரன் பொறுப்பேற்றுள்ளார். இவரின் கடுமையான முயற்சியால் இப்போது மண்டபம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. ஆலய கட்டட விருந்து நிகழ்ச்சிக்கு ஆதரவு தர விரும்பும் நல்லுள்ளங்கள் 012- 2782465 என்ற எண்ணில் பாஸ்கரனை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

