
கோலாலம்பூர் மார்ச் 12-
நாட்டில் மிகவும் புகழ்பெற்ற பகாங் மாரான் மரத்தாண்டவர் ஆலய 93 ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா வரும் மார்ச் 24,25 ஆம் தேதிகளில் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது என்று ஆலயத் தலைவர் தமிழ்ச்செல்வன் கந்தசாமி தெரிவித்தார்.
மாரான் மரத்தாண்டவர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
வரும் மார்ச் 24 ஆம் தேதி மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திரத் திருவிழா களைக்கட்டி விடும்.
அன்றிரவு ஆலய மண்டபத்தில் எட்டு மணி நேரத்திற்கு கலைவிழா நடைபெறுகிறது.
ஸ்ரீ கங்கை இன்னிசை குழுத் தலைவர் டி. ரத்தினகுமார் மேற்பார்வையில் நாட்டின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாண்டு மூன்று லட்சம் பக்தர்கள் மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
நல்லுள்ளம் படைத்த கொடை நெஞ்சர்கள் இம்முறை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.
பக்தர்களின் வசதிக்காக போதுமான கழிப்பறைகள் மற்றும் பேருந்துகள் நிறுத்துவதற்கு இடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
சபாய் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
பகாங் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரூஸ்டியும் உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவருக்கு இவ்வேளையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இன்று மெட்ராஸ் கபே உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டத்தோ தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் சபாய் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம், மாரான் மரத்தாண்டவர் ஆலய செயலாளர் டாக்டர் ஜெயந்திரன், துணை தலைவர் மருதவேலு உட்பட ஆலய நிர்வாகத்தினர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

