கோல குபு பாருவிலுள்ள இந்திய அரசு சாரா அமைப்புகளுடன் ஹன்னா இயோ முக்கிய சந்திப்பு!

(காளிதாஸ் சுப்ரமணியம்)
(எம் பவளச்செல்வன்)

கோலகுபு பாரு ஏப்ரல் 8-
கோல குபு பாருவிலுள்ள இந்திய அரசு சாரா அமைப்புகளுடன் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ நேற்று முன்தினம் முக்கிய சந்திப்பு நடத்தினார்.

இந்த சந்திப்பில் இத்தொகுதியிலுள்ள எட்டு இந்திய அரசு சாரா அமைப்புகளோடு இளைஞர் இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின் போது தொகுதி மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதி, மருத்துவம் மற்றும் சமூக நலன் சார்ந்த பிரச்சனைளை சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்வைத்ததாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் இதர அமைச்சரவை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வாக்குறுதியளித்தார்.

கோல குபு பாரு பல்லின மக்கள் மற்றும் கலாசார கூறுகளை உள்ளடக்கிய தொகுதியாக விளங்குகிறது. ஆகவே, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் லீயைப் போல் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு வேட்பாளரை தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த லீ ஆலயங்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பூர்வக்குடியினரின் குடியிருப்புகளில் களமிறங்கி சேவையாற்றி வந்தார்.

லீ போன்ற துடிப்புமிக்க சேவையாளர் வேட்பாளராக வர வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று ஹன்னா இயோ சொன்னார்.

இத்தொகுதியில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவுள்ள வேளையில் முதல் கட்ட வாக்களிப்பு மே 7ஆம் தேதியும் தேர்தல் மே 11ஆம் தேதியும் நடைபெறும்.
மொத்தம் 40,226 வாக்காளர்களைக் கொண்டஇந்த தொகுதியில் 46 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களும் 30 விழுக்காட்டு சீன வாக்காளர்களும் 18 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களும் 6 விழுக்காட்டு இதர இன வாக்காளர்களும் உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles