
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஏப்ரல் 21-
இந்திய இளைஞர்கள் மத்தியில் கால்பந்து பயிற்சி திட்டங்களை மேற்கொண்டு வரும் மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்திற்கு மித்ரா உதவ வேண்டும் என்று அதன் தலைவர் அன்பானந்தன் கேட்டுக்கொண்டார்.
கால்பந்து விளையாட்டின் மீதான தாக்கத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கில் மீபா பல பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டி, பயிற்சி பட்டறைகள், நடுவர் பயிற்சிகள் என பல முயற்சிகளை மீபா மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு திட்டமும் வெற்றியடைய பல நல்லுள்ளங்கள் எங்களுக்கு துணையாக உள்ளனர்.
ஆனால், அரசாங்கம் குறிப்பாக மித்ரா எங்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்வது இல்லை.
பலமுறை விண்ணப்பம் செய்தும் மித்ரா தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
மீபாவின் அனைத்து கணக்குகள் வெளிப்படையாக உள்ளது. இருந்தாலும் மித்ரா எங்களை ஓரங்கட்டுவது ஏன் என்று அன்பானந்தன் கேள்வியை எழுப்பினார்.
இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்கான திட்டங்களை மேற்கொள்வது தான் மித்ராவின் இலக்காக உள்ளது.
அந்த உருமாற்றத்தை தான் மீபா மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கால்பந்துப் போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துக் கொள்கின்றனர் என்று அவர் சொன்னார்.

