நான்கு தலைமுறைகள் கண்ட ஸ்ரீ மகா உத்திர காளீஸ்வரி ஆலய கும்பாபிஷேக விழா!

காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்

ஜிஞ்ஜாங் செலாத்தானில் அமைந்துள்ள ஶ்ரீ மகா காளீஸ்வரி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா மிக விமரிசையாக இன்று நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்களாக கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடைபெற்றது. இன்று அதிகாலை யாகங்களும் பூஜைகளுக்கும் பிறகு காலை 8.42 மணிக்கு ஆலய கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக பூஜைகளை தமிழ்நாடு திருச்சந்தூர் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் ஸ்தானிகர் கைலாய தரிசி ஸ்கந்த ப்ரதிஷ்டா ஆகம குஹ ஶ்ரீ எஸ்.முத்துசுப்பிரமணியன், சிவ ஆகம ப்ரதிஷ்டா கீர்த்தி எஸ்.ரமேஷ், சிவாகமரத்தினம் கே.மணிகண்டன், ஆகம சிரோன்மணி எஸ்.நடேசன், ஆகம ப்ரதிஷ்டா கீர்த்தி எச்.சுந்தராமன் மற்றும் சிவாச்சாரியார்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நான்கு தலைமுறைகளாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த ஸ்ரீ மகா உத்திர காளீஸ்வரி அம்மன் ஆலயம் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது.

ஜிஞ்ஜாங் செலாத்தானில் சுமார் நூறு வருடங்களுக்கு மேல் அருள் பாலித்து வரும் இந்த ஸ்ரீ மகா உத்திர காளீஸ்வரி அம்மன் ஆலயம் நான்கு தலைமுறைகளாக பராமரிக்கப்பட்டு வருவது சிறப்பு அம்சமாகும்.

முதலாவது தலைமுறையில் இவ்வாலயத்தில் வேல் வைத்து வழிபடப்பட்டது. இரண்டாவது தலைமுறையினர் சிறிய கொட்டகை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

மூன்றாவது தலைமுறையில் டத்தோஶ்ரீ ஆறுமுகம் அவர்களின் முயற்சியால் செங்கல் ஆலயம் அமைக்கப்பட்டு ஸ்ரீ மகா உத்திர காளீஸ்வரி அம்மனின் திருவுருவச் சிலை எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது

இன்று நான்காவது தலைமுறையாக டத்தோ ரங்கநாதன் அவர்களின் முயற்சியில் ஆலயம் முழுமையிலும் புதுப்பிக்கப்பட்டு மிக விமரிசையாக இன்று ஆலயம் கும்பாபிஷேக கண்டிருக்கிறது.

இவ்வாலயத்தில் பக்தர்களுக்கு கட்டணங்கள் இன்றி அர்ச்சனைகள் செய்து தருவது மட்டுமல்லாமல் ஆலயத்தில் உண்டியல் வைக்கும் முறையும் இல்லாதது ஒரு தனி சிறப்பு அம்சமாக விளங்குகிறது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் படைசூழ கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக பூஜைகளை சிறப்புடன் நிறைவேற்றிய சிவாச்சாரியர்களுக்கும் வருகை தந்த பக்கதர்களுக்கும் டத்தோஶ்ரீ ஆறுமுகம் மற்றும் டத்தோ ரங்கநாதன் அவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் ஆலய நிர்வாகத்தின் சார்பிலும் ஆலய அரங்காவளர் செல்வராஜூ நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

கும்பாபிஷேக விழாவில் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலயத்திலிருந்து ஶ்ரீ ஶ்ரீ சடகோப்ப ராமானுஜர் ஜியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles