
காளிதாஸ் சுப்ரமணியம்
ஈப்போ, மே.26:
இந்நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சினை மிகவும் தீவிரமாக கல்வி அமைச்சு கவனித்து வருகிறது.
இப்பிரச்சினைகள் களைவதற்கு அதற்கான முறையான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று புந்தோங்கில் நடைபெற்ற அரசாங்க உயர்கல்வி கூடங்களின் வழிகாட்டி கருத்தரங்கை தொடக்கி வைத்த போது துணை கல்வியமைச்சரும், தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓங் கா வோ கூறினார்.
ஆசிரியர் கல்வி கழகத்தின் வாயிலாக பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
அதன் பின், அரசாங்க பொதுச்சேவை துறை வாயிலாகவும் கல்வித்துறையில் பயின்றவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, கல்வித்துறையில் பட்டம் பெறாத வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
பிறகு, கல்வித்துறையில் டிப்ளோமா வரை படித்து தகுதியாக்கி கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு அரசாங்க பொதுச்சேவை துறையின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 16,620 பட்டதாரி ஆசிரியர்கள் ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கு பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
அவ்வாறு, தமிழ்மொழி ஆசிரியர்களாக 115 பேர் நியமனம் செய்யப்பட்டனர். சீப்ப்பள்ளிகளுக்கு 249 ஆசிரியர்களும், டெக்னிக்கல் பள்ளிகளுக்கு 600 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதோடு இந்நாட்டில் 150 தமிழாசிரியர்கள் தேவைப்பட்டது. இருப்பினும், அவர்களில் 115 தகுதியானவர்கள் என்ற அடிப் படையில் நியமனம் செய்யப்பட்டனர்.
ஆனால், சீனப் பள்ளிகள் பெரும் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். அதாவது இந்நாட்டில் 1132 சீன ஆசிரியர்கள் தேவைப்பட்டது. இருப்பினும், 376 பேர் மட்டுமே நேர்முக பேட்டிக்கு தகுதியானர்கள்.
அவர்களில் 249 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.
இந்நாட்டில் கல்வி அமைச்சு ஒரே கல்வி நேரத்தை அமலாக்கம் செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என்பதால் வகுப்பறை பற்றாக்குறை பிரச்சினைகள் நிலவி வருகிறது.
இம்மாதிரியான பள்ளிகளுக்கு பள்ளி வளாகத்தில் போதிய இடம் அல்லது நிலம் இருக்குமானால் புதிய இணை கட்டடங்களை அரசாங்கமே கட்டுத்தரும் என்று அவர் உறுதியளித்தார்.
அப்படி நில பிரச்சினைகள் இருக்குமாயின் மாற்று இடத்தை அடையாளம் கண்டு அரசாங்கமே புதிய கட்டங்களை அல்லது புதிய பள்ளிகளை உருவாக்கும் என்றார் அவர்.

