சென்னை: மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த மோதல் தற்போது அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் இடையே பூதாகரமாக வெடித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு மோதி வருகின்றனர். யார் மாநில தலைவராக இருந்த போது கட்சி வளர்ந்தது என்று விவாதம் நடைபெற்று வருகிறது.
பாஜ போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி தான் கிடைத்தது. 11 இடங்களில் டெபாசிட் இழந்தது.
தேர்தல் தோல்வி அடைந்ததும் பாஜவில் மோதல் போக்கு உருவானது. மோதலுக்கு முன்னாள் பாஜதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிள்ளையார் சுழி போட்டுக்கொடுத்தார்.
மக்களவை தேர்தலில் பாஜ தோல்விக்கு மாநில தலைவர் அண்ணாமலை எடுத்த தவறான முடிவு தான் காரணம் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் 20 இடங்களிலாவது வெற்றி பெற்று இருக்கலாம் என்றும் ஒரு கருத்தை தெரிவித்தார். தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என்ற கோஷமும் ஒரு தரப்பில் இருந்து எதிரொலிக்க தொடங்கியுள்ளது.