
செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் ஜூன் 13-
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியின் குலுக்கல் வரும் ஜூன் 26ஆம் தேதி சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளி கொன்வெஷன் செண்டரில் நடைபெறும் என்று அச்சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்..
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இப் போட்டி ஒவ்வோர் ஆண்டும் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் 20ஆம் ஆண்டு சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி வரும் ஜூலை 13ஆம் தேதி சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறுகிறது.
ஆண்கள் பிரிவில் 64 குழுக்களும் பெண்கள் பிரிவில் 32 குழுக்களும் இப் போட்டியில் பங்கேற்கவுள்ளன.
இதுவரை ஆண்கள் பிரிவில் 40 குருக்களும் பெண்கள் பிரிவில் 19 குழுக்களும் பதிந்து கொண்டுள்ளன என்றார்.
குலுக்கல் தேதிக்குள் இந்த எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளது என்று அவர் சொன்னார்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து பள்ளிகளின் பிரதிநிதிகளும் இக்குலுக்கலில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
இந்த கால்பந்துப் போட்டியில் வெற்றி பெறும் குழுக்களுக்கு 7,000 ரிங்கிட்டும் ரொக்கமும் மாணவிகள் பிரிவில் வெற்றி பெறும் குழுக்களுக்கு 5,000 ரிங்கிட் ரொக்கமும் காத்துக் கொண்டிருக்கிறது.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் அமரர் நமச்சிவாயம் கிண்ணம் என்ற பெயரில் இப்
போட்டி விமரிசையாக நடத்தப்படுகிறது என்று பத்துமலை கூறினார்.
இன்று நடைபெற்ற பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் உச்சமன்ற கூட்டத்தில் துணை தலைவர் குணசேகரன், கென்னத் கண்ணா, செயலாளர் குணசேகரன், பொருளாளர் இராமச்சந்திரன் உட்பட அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

